உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக இலவச எல்.இ.டி., டிவி?

 தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக இலவச எல்.இ.டி., டிவி?

“எ ல்லாம் பொறுப்புமயமா போயிட்டுல்லா...” என, அங்கலாய்த்தபடியே பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி. “எந்த துறையில பா...” என கேட்டார், அன்வர்பாய். “மதுரை காமராஜ் பல்கலையில், ஒரு வருஷமா துணைவேந்தரே இல்ல... அதேபோல, பதிவாளர், கூடுதல் தேர்வாணையர், தொலைநிலை கல்வி இயக்குநர்னு எந்த முக்கிய பதவிகளுக்கும் அதிகாரிகள் இல்ல வே... “இந்த பதவிகளை, துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தான் கூடுதல் பொறுப்பா கவனிக்காவ... பொறுப்பு பதவிகள் அதிகபட்சம் ஆறு மாசம் தான்னு விதிகள் இருந்தாலும், சிலர் வருஷக்கணக்கில் அந்த பதவியில் நீடிக்காவ வே... “அதோட, பொறுப்பு பதவிகள்ல இருக்கிறவங்க, தங்களது கற்பித்தல் பணிகளை சரியா செய்யாம கோட்டை விடுதாவ... இதனால, மாணவர்கள் நலன் கருதி, பொறுப்பு பதவிகளை சுழற்சி முறையில் பேராசிரியர்களுக்கு பிரிச்சு வழங்க, உயர் கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாவ... “ஆனா, 'கவர்னரின் ஆதரவாளர்கள், பல்கலையில் தேவையில்லாத குளறு படிகளை உருவாக்க பார்க்காவ'ன்னு சிலர் கொளுத்தி போட்டு, அதுக்கும் முட்டுக்கட்டை போட்டுட்டாவ வே...” என்றார், அண்ணாச்சி. “அதிகாரியை மிரட்டியிருக்காருங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... “துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதி தி.மு.க., புள்ளியின் நெருங்கிய ஆதரவாளர் ஒருத்தர் வீடு கட்டியிருக்கார்... அந்த இடத்துக்கான பட்டா, வேற ஒருத்தர் பெயர்ல இருக்குதுங்க... “அந்த பட்டாவை தன் ஆதரவாளர் பெயருக்கு மாற்றி தரும்படி, தாலுகா அதிகாரியை, அவரது அலுவலகத்துல தொகுதி புள்ளி சமீபத்தில் நேர்ல பார்த்து வலியுறுத்தியிருக்காரு... அதிகாரி, 'அதுல நிறைய சிக்கல் இருக்கு சார்'னு சொல்லியிருக்காருங்க... “உடனே கோபமான தொகுதி புள்ளி, அதிகாரியை ஒருமையில திட்டி மிரட்டியிருக்காரு... மாவட்ட உயர் அதிகாரிக்கும் போனை போட்டு, 'தாலுகா அதிகாரியை உடனே மாத்துங்க'ன்னும் அழுத்தம் குடுத்திருக்காருங்க... “மாவட்ட அதிகாரியோ, 'பேசி முடிச்சிக்கிடுங்க'ன்னு நழுவிட்டாரு... இப்ப, பட்டாவில் பெயர் உள்ளவருக்கு வேற இடமும், கொஞ்சம் தொகையும் கொடுத்து பிரச்னையை முடிக்க போறாங்க... ஆனாலும், 'என்னை எதிர்த்து பேசிய தாலுகா அதிகாரியை மாத்தியே தீருவேன்'னு தொகுதி புள்ளி கங்கணம் கட்டியிருக்காருங்க...” என்றார், அந்தோணிசாமி. ஒலித்த மொபைல் போனை எடுத்த அன்வர்பாய், “மார்க்கண்டேயன், உங்க பேரை கேட்டாலே, கண்ணன் நடுங்குறாரு பா...” என்றபடியே, தள்ளி சென்று பேச துவங்கினார். உடனே, “எல்.இ.டி., டிவியா, மொபைல் போனான்னு தெரியல ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... “ஆட்சியை தக்கவச்சுக்க துடிக்கற தி.மு.க.,வினர், தேர்தல் அறிக்கையில், மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை வாரி வழங்க திட்டமிட்டிருக்கா... இந்த முறை குடும்பத்துக்கு ஒரு எல்.இ.டி., 'டிவி' அல்லது, 'ஸ்மார்ட் போன்' வழங்கலாமான்னு யோசனை பண்றா ஓய்... “இன்னும் சிலர், கையடக்க கணினியான, 'டேப்' வழங்கலாம்னு சொல்றா... 'இதுல ஏதாவது ஒண்ணு, தேர்தல் அறிக்கையில் இருக்கும்'னு ஆளுங்கட்சி வட்டாரங்கள்ல பேசிக்கறா ஓய்...” என முடித்தார், குப்பண்ணா. பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 11, 2026 06:47

Smart phone கொடுத்துவிட்டு, 'உங்கள் boy friend ' இடம் பேசலாம் என்று நையாண்டி செய்த அமைச்சர் நினைவுக்கு வருகிறார். விரைவில் மார்க்கெட்டில் 'ஸ்டாலின், உதயநிதி' ஸ்டிக்கர் உடன் கூடிய எல். ஈ. டீ டிவிக்கள் அரை, கால் விலையில் விற்பனைக்கு வரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை