உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  கர்நாடக முதல்வர் பதவி விவகாரம்: வேணுகோபாலுக்கு கார்கே உத்தரவு

 கர்நாடக முதல்வர் பதவி விவகாரம்: வேணுகோபாலுக்கு கார்கே உத்தரவு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவி விவகார பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, வேணுகோபாலுக்கு, மல்லிகார்ஜுன் கார்கே உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சித்தராமையா, சிவகுமார் இடையில், கர்நாடக முதல்வர் பதவிக்காக பிரச்னை ஏற்பட்டு உள்ளது. சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வைத்து உள்ள நிலையில், சித்தராமையாவே பதவியில் தொடர வேண்டும் என்று, அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அரசு அமைந்து நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், முதல்வர் பதவியை பிடிக்க சிவகுமார் தீவிர முயற்சியில் களம் இறங்கி உள்ளார். கடந்த சில மாதங்களாக மேலிட தலைவர்களிடம், முதல்வர் பதவிக்காக கோரிக்கை வைத்து வந்தார். ஆனால் ஐந்து மாநில தேர்தல் முடிந்ததும் பார்த்து கொள்ளலாம் என்று, மேலிடம் கூறி வந்தது. தற்போது 5 மாநில தேர்தல் முடிந்து, கேரளாவில் காங்கிரஸ் வரலாற்று வெற்றி பெற்று உள்ளது. தமிழகத்திலும் புதிய கட்சியான தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்து உள்ளனர். இருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க உள்ளது. இந்நிலையில் கேரளம் முதல்வர் வி.டி.சதீஷன் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியின் தேசிய அமைப்பு பொது செயலர் வேணுகோபால் ஆகியோர், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரகசிய ஆலோசனை நடத்தி உள்ளனர். கேரளாவில் வெற்றி பெற்று அரசு அமைந்து விட்டது. இனி கவனத்தை கர்நாடகா மீது திருப்புங்கள். முதல்வர் பதவிக்காக அங்கு நடக்கும் பிரச்னை, கட்சி மேலிடம் மீது அழுத்தமாக உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கும்படி, வேணுகோபாலிடம், கார்கே கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. வேணுகோபால், தற்போது கேரளாவில் உள்ளார். அவர் டில்லி திரும்பியதும், சித்தராமையா, சிவகுமாருக்கு டில்லி வரும்படி அழைப்பு விடுக்க வாய்ப்பு உள்ளதாக, அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ