யாரும் யோக்கியர் இல்லை!
'இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு எங்களை விமர்சிப்பார்...' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமாரை பார்த்து கிண் டல் அடிக்கின்றனர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர். பீஹாரில், பிரதான எதிர்க்கட்சியாக, முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி உள்ளது. தற்போது இந்த கட்சியின் தலைவராக, லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளார். லாலுவின் மகள் மிசா பாரதி, லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். லாலுவின் மனைவியும், முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி, பீஹார் மேல்சபையில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இதனால், 'ராஷ்ட்ரீய ஜனதா தளம், வாரிசு அரசியல் செய்கிறது. லாலுவின் ஒட்டுமொத்த குடும்பமும், முக்கிய பதவிகளை ஆக்கிரமித்துள்ளது. அங்கு சாதாரண தொண்டர்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை...' என, முதல்வர் நிதிஷ் குமார், அடிக்கடி விமர்சிப்பது வழக்கம். இந்த நிலையில், நிதிஷ் குமார், சமீபத்தில் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார். அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகவும் முடிவு செய்துள்ளார். அதன்பின், அவரது கூட்டணி கட்சியான பா.ஜ.,வை சேர்ந்த ஒருவர் முதல்வராகவும், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் துணை முதல்வராகவும் பதவியேற்க இருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை கேள்விப்பட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர், 'வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என, எங்களை இனி நிதிஷ் குமார் விமர்சிக்க முடியாது. இந்த விஷயத்தில் அவரும் இனி யோக்கியர் இல்லை...' என்கின்றனர்.