ரயிலில் உரங்கள் கொண்டு வர அனுமதி
தேனி: தேனி மாவட்டத்திற்கு சரக்கு ரயில் மூலம் உரங்கள் கொண்டு வர மத்திய உரத்துறை அனுமதி வழங்கி உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர். மாவட்டத்தில் 77 வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 227 உரக்கடைகள் மூலம் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு தேவையான உரங்கள் மதுரை அல்லது திண்டுக்கல் வரை சரக்கு ரயில்களில் கொண்டு வரப்படும். அங்கிருந்து லாரிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள டீலர்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ரயிலில் உரங்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்கி மத்திய உரத்துறை மாநில வேளாண்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது. கூடுதல் லாபம் கிடைக்கும் வேளாண்துறையினர் கூறுகையில், 'விவசாயிகளுக்கு எம்.ஆர்.பி., விலையில் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீலர்கள், சங்கங்களுக்கு குறைந்த லாபம் மட்டும் கிடைத்து வந்தது. ரயில் மூலம் நேரடியாக உரங்கள் கொண்டு வருவதால் போக்குவரத்து செலவுகள் குறையும். இதனால் சங்கங்கள், டீலர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உரங்கள் ரயில் மூலம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும்,' என்றனர்.