மேலும் செய்திகள்
குபேரா - டிரைலர்
16-Jun-2025
பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''பதவி உயர்வுக்கு தடை போடுதாவ வே...'' என, முதல் ஆளாக பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில், எலக்ட்ரிக்கல் துறை இருக்கு... இங்க, உதவி நிர்வாக பொறியாளரா இருக்கிறவங்கள்ல, குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவங்க பெயர்களை மட்டும் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்க மாட்டேங்காவ வே...''உயர் அதிகாரிகளிடம் போய் கேட்டா, 'உங்க பதவி உயர்வு தொடர்பான பைல்களை காணலையே'ன்னு அசால்டா பதில் சொல்லுதாவ... 'அது எப்படி குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவங்க பைல்கள் மட்டும் மாயமாகும்'னு சந்தேகப்படுதாவ...''இந்த விவகாரத்தை, துறையின் அமைச்சர் மற்றும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துட்டு போகவும் முடிவு பண்ணியிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''தரமில்லாத மளிகை பொருட்களை வாங்க சொல்றாரு பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''தமிழகத்துல, கூட்டுறவு சங்கங்களுக்கு மளிகை பொருட்கள் சப்ளை பண்ணும் தனியார் நிறுவனத்தின் தலைவர், துறையின் முக்கிய புள்ளியின் உதவியாளரை கைக்குள்ள வச்சிருக்காரு... ''உதவியாளர் மூலமா, தமிழகம் முழுக்க இருக்கிற மொத்த விற்பனை கூட்டுறவு பண்டகசாலை இணை பதிவாளர்களை மிரட்டி, மக்கள் விரும்பாத மளிகை பொருட்களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்துறாரு பா...''அந்த நிறுவனம் சப்ளை செய்ற மளிகை பொருள் பாக்கெட்கள்ல வண்டு, புழுக்கள் எல்லாம் இருக்குன்னு இணை பதிவாளர்கள் தயங்குறாங்க... ஆனா, நிறுவன தலைவரோ, 'துறையின் முக்கிய புள்ளிக்கும், உதவியாளருக்கும் கொடுக்க வேண்டியதை, 'திருப்தி'யா கொடுத்துட்டு இருக்கேன்... பயப்படாம வாங்குங்க... யாரும், என்னை எதுவும் பண்ண முடியாது'ன்னு மிரட்டி வாங்க வைக்கிறாரு பா...''இதனால, 'முக்கிய புள்ளியின் உதவியாளர் தான், நிறுவனத்தின் உண்மையான உரிமையாளரா இருப்பாரோ'ன்னு இணை பதிவாளர்கள் எல்லாம் சந்தேகப்படுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''இன்ஸ்பெக்டரை மிரட்டியிருக்கார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''கோவையில், மேற்கு மண்டல ஐ.ஜி., சிட்டி போலீஸ் கமிஷனர், டி.ஐ.ஜி., - எஸ்.பி.,ன்னு முக்கிய அதிகாரிகளின் ஆபீஸ்கள் இருக்கு... ''இதுல, நாலு மாவட்டங்களுக்கு பொறுப்பான போலீஸ் அதிகாரி ஒருத்தர், கமிஷனரை மீறி, மாநகர போலீசாருக்கு அடிக்கடி, 'ஆர்டர்' போடறார் ஓய்...''சமீபத்துல, மாநகர இன்ஸ்பெக்டர் ஒருத்தருக்கு போன் போட்டு, ஒரு குடும்ப பிரச்னையில ஒரு தரப்பினருக்கு ஆதரவா வழக்கு பதியும்படி உத்தரவு போட்டிருக்கார்... இன்ஸ்பெக்டர் நேர்மையான ஆளா இருந்ததால, 'அப்படி எல்லாம் பண்ண முடியாது சார்'னு பவ்யமா சொல்லியிருக்கார் ஓய்...''உடனே, 'மேல் அதிகாரி சொன்னா செய்ய முடியாதா'ன்னு மிரட்டியிருக்கார்... ஆனாலும், 'கமிஷனர் சொல்லாம என்னால எதுவும் பண்ண முடியாது'ன்னு இன்ஸ்பெக்டர் மறுத்துட்டார்... 'நேர்மையா பணியாற்ற நினைச்சாலும், இந்த மாதிரி அதிகாரிகள் விடமாட்டா போலிருக்கே'ன்னு கோவை போலீசார் பலரும் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.
16-Jun-2025