''தே ர்தல் களம் சூடு பிடிச்சிடுச்சுங்க...'' என்ற படியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி. ''அதுக்கு தான் இன்னும் அஞ்சாறு மாசம் இருக்கே பா...'' என்றார், அன்வர்பாய். ''நான் சொல்றது, வக்கீல்களுக்கான பார் கவுன்சில் தேர்தலை... தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் பதவிக்கு, கடந்த ஒன்றரை வருஷத்துக்கு மேலா தேர்தல் நடக்கலைங்க... ''சீக்கிரமே இதுக்கு தேர்தல் நடக்க போகுது... 25 உறுப்பினர்கள் அடங்கிய இந்த கவுன்சில்ல, பதிவு செய்த, 1.50 லட்சம் வக்கீல்கள் இருக்காங்க... ''தேர்தல்ல போட்டியிட, அ.தி.மு.க., சார்பில் சென்னை ஐகோர்ட் வக்கீல் விஜயராஜ், தி.மு.க.,வில் துரைகண்ணன், பா.ஜ.,வில் பால்கனகராஜ், த.மா.கா.,வில் மலையூ ர் புருஷோத்தமன்னு பலரும் தயாராகிட்டு இருக்காவ... இது தவிர, வி.சி., - கம்யூ., கட்சிகளின் வக்கீல்களும் களம் இறங்கிட்டதால, தேர்தல் களம் பரபரப்பா இருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''காதும் காதும் வச்ச மாதிரி கூட்டத்தை நடத்தி முடிச்சுட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''எந்த கூட்டத்தை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''திருப்பூர் மாவட்ட பொது விநிேயாக துறை சார்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் தொடர்பா, இளம் நுகர்வோருக்கான புத்தாக்க பயிற்சி, போன வாரம் நடந்துது... கலெக்டர் அலுவலகத்துல நடந்த பயிற்சி கூட்டத்துக்கு, பதிவு பெற்ற நுகர்வோர் அமைப்புகளை கூட கூப்பிடல ஓய்... ''வருவாய் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்கள் மட்டும் சேர்த்து பயிற்சியை நடத்தி முடிச்சுட்டா... ரேஷன் கடை குறை கேட்பு, 'காஸ்' வினியோக குறை கேட்பு, விவசாயிகள் குறைகேட்பு கூட்டங்கள்ல கலந்துக்கற நுகர்வோர் அமைப்பினர், விதிமீறல், முறைகேடுகள் குறித்து கேள்வி மேல கேள்வியா கேக்கறா ஓய்... ''சில நேரங்கள்ல, இந்த மாதிரி கூட்டங்கள்ல போராட்டமும் நடத்திடறா... அதனால தான், இந்த முறை யாரையும் கூப்பிடாம, சத்தமில்லாம பயிற்சியை நடத்தி முடிச்சிருக்கா... இதனால, 'அவங்க தான் எங்களை அழைக்கலைன்னா, மாவட்ட உயர் அதிகாரிகள் கூட எங்களை கண்டுக்கலையே'ன்னு நுகர்வோர் அமைப்பினர் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''ஆண்டாளை தரிசிக்க அணிவகுத்து வர்றாவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி. ''ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளை தானே...'' என கேட்டார், குப்பண்ணா. ''ஆமா... சட்டசபை தேர்தல் நெருங்குதுல்லா... எம்.எல்.ஏ., சீட்டை பிடிக்க, பல கட்சிகள்லயும் இப்பவே முயற்சிகளை துவங்கிட்டாவ வே... ''ஆண்டாளை வந்து தரிசனம் பண்ணிட்டு போனா, பதவிகள் கிடைக்கும்னு பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை இருக்கு... அதுக்கு ஏத்த மாதிரி, சில மாசத்துக்கு முன்னாடி, மஹாராஷ்டிரா மாநில கவர்னரா வந்து ஆண்டாளை தரிசனம் பண்ணிட்டு போன, சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாகிட்டாருல்லா... ''இதனால, அ.தி.மு.க., - பா.ஜ., பிரமுகர்கள் பலர், தினமும் ஸ்ரீவில்லிபுத்துா ருக்கு படையெடுத்து வர்றாவ... அவ்வளவு ஏன்... பெருசா சாமி நம்பிக்கை இல்லாத மாதிரி காட்டிக்கிற, தி.மு.க., பிரமுகர்கள் பலரும், ஆண்டாளை தரிசனம் பண்ணிட்டு போறாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி. அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.