உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஒன்றரை ஆண்டில் 5 வீடு வாங்கிய ஆளுங்கட்சி புள்ளி!

ஒன்றரை ஆண்டில் 5 வீடு வாங்கிய ஆளுங்கட்சி புள்ளி!

''நியூமராலஜி பார்த்து பெயரை மாற்றியதும், பதவி, அதிகாரம் எல்லாம் தேடி வரதுன்னு சொல்றா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையது, சில மாதங்களுக்கு முன்னாடியே நியூமராலஜி பார்த்து, தன் பெயரை சையத் அசீனான்னு மாத்திக்கிட்டாங்க... 2011ல் நடந்த சட்டசபை தேர்தல்ல, இவங்களுக்கு கிருஷ்ணகிரி தொகுதியில் முதல்ல சீட் குடுத்திருக்கா ஓய்...''அதுக்கு, தொகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பவே, அவரது கணவர் சையது போட்டியிட்டு, தோத்தும் போயிட்டார்... அப்புறமா, 2014 லோக்சபா தேர்தல், 2016 சட்டசபை தேர்தல், 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல்னு எதுலயும் ஹசீனாவுக்கு சீட் கிடைக்கல ஓய்...''அப்புறமா தன் பெயரை சையத் அசீனான்னு மாற்றிய பிறகு, தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பதவி கிடைச்சிடுத்து... மகளிர் காங்கிரசுக்கு மற்ற மாநிலங்களை விட அதிக உறுப்பினர்களை சேர்த்து, ராகுலின் 'குட்புக்'லயும் இடம் பிடிச்சிருக்காங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.''பல கோடி ரூபாய் செலவழிச்சும் பலன் இல்லையாம் பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''சென்னை அண்ணா சாலையில், 10 மாடியில மின் வாரிய அலுவலகம் இருக்கே... இந்த 10 மாடிக்கு இணையா, அதே உயரத்தில் சில அடிக்கு இணைப்பு கட்டடம் கட்டும் பணிகள், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டுல, 2017 மார்ச்சில் துவங்குச்சு பா...''பணிகளை ரெண்டு வருஷத்துல முடிக்க திட்டமிட்டாங்க... ஆனா, எட்டு வருஷமா இழுத்தடிச்சு, இணைப்பு கட்டட பணிகள் சமீபத்துல தான் முடிஞ்சது பா...''இதனால, மதிப்பீட்டை விட அஞ்சு மடங்கு கூடுதல் செலவாகியிருக்குது... அப்படியிருந்தும், 'பணிகள் திருப்திகரமா இல்ல'ன்னு மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் எல்லாம் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''மாவட்ட செயலருக்கு எதிரா போர்க்கொடி துாக்கியிருக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''எந்த கட்சியிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''சென்னை பெரம்பூர் சட்டசபை தொகுதி, தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், துணை பொதுச்செயலர் ஆ.ராஜா தலைமையில் நடந்துச்சு... இதுல, மாவட்ட மற்றும் தொகுதியின் முக்கிய புள்ளியா இருக்கிறவர் மீது நிர்வாகிகள் சரமாரியா புகார் தெரிவிச்சு, கூச்சல் போட்டிருக்காவ வே...''ராஜா, 'எந்த புகாரா இருந்தாலும் எழுதி, என் வீட்டுல வந்து குடுங்க... தலைமைக்கு கொண்டு போறேன்'னு சொல்லியிருக்காரு... 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தனித்தனியா புகார் எழுதி, ராஜா வீட்டுல குடுத்திருக்காவ வே...''அதுல, கட்சி நிர்வாகிகளுக்கு மாவட்ட புள்ளி மரியாதை தர மாட்டேங்காரு... அதுவும் இல்லாம மட்டம் தட்டியும் பேசுதாரு... கடந்த ஒன்றரை வருஷத்துல மட்டும், தன் பெயர்லயும், தன் மனைவி பெயர்லயும் அஞ்சு வீடு வாங்கிட்டாரு...''தொகுதி நிதியில் செய்யப்படும் பணியை கூட, தன் வீட்டு முகவரியில் செயல்படும் நிறுவனத்துக்கே வழங்கியிருக்கார்னு, ஆர்.டி.எக்ஸ்., வெடிகுண்டு மாதிரி வெடிச்சிருக்காவ... தலைமை என்ன நடவடிக்கை எடுக்கும்னு காத்துட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஜூன் 27, 2025 16:35

40% கமிஷன் எல்லா திட்டத்திலும் அது கொடுப்பவர்களுக்குத்தான் அந்த ஆர்டர் செல்லும் அந்த பணியை செய்ய


Anantharaman Srinivasan
ஜூன் 27, 2025 01:06

போட்ட estimate டைவிட மின்வாரிய கட்டிடம் கட்ட மதிப்பீட்டை விட அஞ்சு மடங்கு கூடுதல் செலவாகியிருக்குது... அப்பதானே பெரிய Amount டா ஆட்டைய போட முடியும். வெறும் 20 கோடியில் என்னதை சுருட்ட முடியும்..?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை