உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஒன்றிய அலுவலகத்தை ஆட்டி படைக்கும் மும்மூர்த்திகள்!

ஒன்றிய அலுவலகத்தை ஆட்டி படைக்கும் மும்மூர்த்திகள்!

“சரியா வேலை நடக்க மாட்டேங்கறது ஓய்...” என்றபடியே வந்தார், குப்பண்ணா.“எந்த துறையில வே...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.“சென்னை, பூந்தமல்லி பக்கத்துல இருக்கற சார் - பதிவாளர் ஆபீசை தான் சொல்றேன்... ரெண்டு அதிகாரிகள் இருக்க வேண்டிய இடத்துல ஒருத்தர் தான் இருக்கார் ஓய்...“அவரும் கூட, அடிக்கடி, 'லாங் லீவ்' எடுத்துண்டு, சொந்த ஊருக்கு கிளம்பிடறார்... இதனால, பத்திரம் பதிவு பண்ற பணிகள் மந்தமாவே நடக்கறது... நிலம், வீடுகளை விக்கறவாளும், வாங்கறவாளும் காத்து கிடக்கறா ஓய்...“லீவ்ல போற அதிகாரிக்கு, 'கட்டிங்' வசூல் பண்ண, தனி ஏஜன்டும் இருக்கார்... ஏற்கனவே இந்த அதிகாரி, நீலாங்கரையில் பணியில இருந்தப்ப, அந்த ஆபீஸ்ல ரெண்டு முறை லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்துது ஓய்...“இங்கயும் அதே வேலைகளை தான் பண்ணிண்டு இருக்கார்... இங்க பத்திரப்பதிவுக்கு வரவா எல்லாம், 'இன்னைக்கு நம்ம காரியம் நல்லபடியா முடியணும்'னு குன்றத்துார் முருகனை கும்பிட்டுட்டு தான் வரா ஓய்...” என்றார், குப்பண்ணா.“பணத்தை எல்லாம் காலி பண்ண சொல்லிட்டாங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...“தேர்தல் வர்றதால, தமிழகத்துல அனைத்து ஊராட்சிகள்லயும் இருக்கும் நிதியை, ஏதாவது வளர்ச்சி பணிகளை செஞ்சு காலி பண்ணும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னையில இருந்து உத்தரவு வந்திருக்கு... “கலெக்டர்களும், யூனியன் பி.டி.ஓ.,க்களுக்கு தகவல் குடுத்துட்டு, 'ஆன்லைன்'லயே நிதியை ஒதுக்கி, பணிகளை செய்றதுக்கான உத்தரவுகளையும் வழங்கிடுறாங்க பா...“இதனால, 'இப்படி இருக்கிற நிதியை எல்லாம் காலி பண்ணிட்டா, ஊராட்சிகள்ல அடிப்படை வசதிகளை செய்ய முடியாம போயிடும்... நாளைக்கு ஏதாவது பிரச்னை வந்தா நாமதானே பதில் சொல்லணும்'னு, பி.டி.ஓ.,க்கள் எல்லாம் புலம்புறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.“பி.டி.ஓ.,க்கள் சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குதுங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...“பொதுவா, யூனியன் பி.டி.ஓ.,க்களை வருஷத்துக்கு ஒருமுறையும், துணை பி.டி.ஓ.,க்களை மூணு வருஷத்துக்கு ஒருமுறையும் கட்டாயமா இடமாறுதல் செய்வாங்க... அதேநேரம், இவங்க மேல ஏதாவது புகார்கள் வந்தா, காலவரம்பு எல்லாம் பார்க்காம, உடனே இடமாறுதல் பண்ணிடுவாங்க...“திருவள்ளூர் மாவட்டத்துல, 14 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கு... இங்க, மூணு வருஷம் முடிச்ச துணை பி.டி.ஓ.,க் கள், புகார்ல சிக்கியவங்கன்னு, 26 பேரை போன வாரம் இடமாற்றம் செஞ்சாங்க...“பிரபல முருகன் கோவில் ஊர் ஒன்றியத்துல, அஞ்சு துணை பி.டி.ஓ.,க்கள் இருக்காங்க... இதுல, ரெண்டு பேரை மட்டும் தான் மாத்தியிருக்காங்க... மற்ற மூணு பேரும், மூணு வருஷம் தாண்டியும் பணியில நீடிக்கிறாங்க...“இந்த மூணு பேருமே, அங்கயே இருக்கும் பி.டி.ஓ., மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி அதிகாரிகளுக்கு முறைப்படி, 'கவனிப்பு' பண்ணிடுறதால, அவங்க மீது யாரும் கைவைக்க முடியல... இந்த ஆபீஸ்ல மூணு பேரும் வைக்கிறது தான் சட்டமா இருக்கு... இவங்களை யாராவது எதிர்த்து பேசினா, அவங்களை வேற இடத்துக்கு மாத்திடுறாங்க... அந்த அளவுக்கு, 'பவர்புல்'லா வலம் வர்றாங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, “கிரி, கோபால், அவினா எல்லாரும் வந்துட்டாளா...” என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ