உள்ளூர் செய்திகள்

விரைவில் மட்கும் பாசி நெகிழி

நெகிழிகளால் ஏராளமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக 'மைக்ரோ ப்ளாஸ்டிக்' எனப்படும் நுண்நெகிழிகள், நிலம், நீர், மனித உடல் என எல்லாவற்றிலும் கலந்துள்ளன. இவை எளிதில் மட்காமல் இருப்பதே பல பிரச்னைகளுக்குக் காரணம். பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த நெகிழிகளுக்கு மாற்றாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாசிகளை அடிப்படையாகக் கொண்ட நெகிழிகள் எளிதாக மட்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான ஆய்வுகள் நுண்நெகிழிகளைச் சுற்றுச்சூழலில் இருந்து அப்புறப்படுத்தும் மிகக் கடினமான செயல்முறையையே மையமாகக் கொண்டிருந்தன. இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலையின் இந்த ஆய்வு, விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு சில விஞ்ஞானிகள் பாசிகளிலிருந்து பெட்ரோலியம் எடுத்துக்காட்டினர். பெட்ரோலியத்திலிருந்து நெகிழியை எடுக்கும்போது, ஏன் நேரடியாகப் பாசிகளிலிருந்தே நெகிழியை எடுக்கக்கூடாது என்ற கேள்வி எழுந்தது. அதுவே, பாசி எண்ணெயிலிருந்து நெகிழியை உருவாக்கும் தொழில்நுட்பத்தின் துவக்கப் புள்ளியானது. பாசிகளிருந்து எடுக்கப்பட்ட, 'TPU-FC1' என்ற ஒருவகை பாலிமரைக் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பாக உலகில் முதல் மக்கக்கூடிய ஷு தயாரிக்கப்பட்டது.கலிபோர்னியா பல்கலை வழக்கமான நெகிழிகளால் உருவாகும் EVA நுண்நெகிழிகளையும், TPU-FC1 பாலிமரால் உருவாக்கபட்ட நுண்நெகிழிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தியது. இரண்டையும் நுண்ணுயிரிகளை வைத்து மக்க வைத்தது. கிட்டத்தட்ட 90 நாட்களில் TPU-FC1, 68 சதவீதம் மட்கிவிட்டது. 200 நாட்களில் 97 சதவீதம் மக்கிவிட்டது. EVA நுண்நெகிழிகளோ மக்கவே இல்லை. அடுத்ததாகத் தண்ணீரில் கலந்து ஆய்வு செய்தனர். 90 நாட்களில் TPU-FC1 32 சதவீதம் மட்கிவிட்டது. 200 நாட்களில் 97 சதவீதம் மட்கிவிட்டது. EVA நுண்நெகிழிகள் நீரிலும் மட்கவில்லை.வருங்காலத்தில் நெகிழித் தயாரிப்பை முழுக்கவே பாசிகளை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றுவது பல நன்மைகள் தரும் என்பதை இந்த ஆய்வு தெரிவிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !