உள்ளூர் செய்திகள்

வெப்பம் மிகுந்த ஆண்டு 2023

பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதையும், இவ்வாறு அதிகரிப்பதால் பல சுற்றுச்சூழல் பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதையும் நாம் அறிவோம். அமெரிக்காவின் 'நாசா' உட்பட, உலகம் முழுதும் இருக்கும் ஐந்து அறிவியல் மையங்கள், 2023 தான் கடந்த 174 ஆண்டுகளிலேயே மிகவும் வெப்பம் மிகுந்த ஆண்டு என்று அறிவித்துள்ளன. கடந்த ஆண்டின் சராசரி வெப்பநிலை என்று ஐந்து மையங்களும் சற்றே மாறுபட்ட முடிவுகளை தந்திருந்தாலும் கூட, 2023ம் ஆண்டு தான் வெப்பம் மிகுந்த ஆண்டு என்பதில் ஐந்து மையங்களும் ஒரே கருத்தை கொண்டுள்ளன. இதற்கு முன் வெப்பமான ஆண்டு என்ற புகழை 2016 பெற்றிருந்தது. கடந்த ஆண்டிலேயே மற்ற மாதங்களை விட ஜூலை மாதத்தில் தான் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ள நாடுகளில் இந்த வெப்பம் பதிவு செய்யப்பட்டது. நிலப் பகுதிகள் மட்டுமின்றி கடலில் வெப்பமும் கடந்த ஆண்டு அதிகமாக இருந்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இந்த அதிகபட்ச வெப்பத்தால், அன்டார்டிகா பகுதிகளில் பனி அதிகளவில் உருகி உள்ளது. இந்த வெப்பத்தால் நிறைய புயல்கள், சூறாவளிகள் ஆகியவை உருவாகி மக்களை கடுமையாக பாதித்துள்ளன. இந்த வெப்பத்தால், வட அமெரிக்க கண்டத்தில் உள்ள கனடா நாட்டில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான முறை காட்டுத் தீ ஏற்பட்டது. காட்டுத் தீயால் மிக அதிகபட்சமான காட்டுப் பரப்பளவு பாதிக்கப்பட்டுள்ளதும் இதே ஆண்டில் தான். கடந்த ஆண்டு வெப்பநிலையே பரவாயில்லை என்ற அளவுக்கு இந்த ஆண்டு வெப்பநிலை இருக்கும் என்று அறிவியலாளர்கள் கணித்திருக்கின்றனர். குறிப்பாக ஏப்ரலுக்கு பிறகான மாதங்களில் வெப்பம் இன்னும் அதிகரிக்கலாம் என்றும், இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

NicoleThomson
ஜன 23, 2024 20:09

இந்த வருடம் இப்பவே கிழியுது , பூமி பந்தை நாசம் செய்யும் மூர்க்கர்களும் , அமெரிக்கர்களும் என்று கட்டுரையே எழுதலாம்