குளிரூட்டும் வைர உடை
உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவும் உடைகள் பல ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ளது வைர உடை. வைரத்தில் உடையா, அது எப்படிச் சாத்தியம்? எல்லா தனிமங்களில் இருந்தும் அவற்றின் நானோ வடிவங்களை உருவாக்க முடியும். அவற்றை உருவாக்குவது அதிக செலவு பிடிக்கும் செயல். ஆனால், வைரங்களின் நானோ வடிவங்கள் அந்தளவுக்குச் செலவு பிடிப்பவை அல்ல.நானோ வைரங்கள், பெரிய வைரங்களைப் போலவே வெப்பம் கடத்தும் தன்மை கொண்டவை. ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்.எம்.ஐ.டி. பல்கலை விஞ்ஞானிகள் இவற்றைக் கொண்டு உடை வடிவமைத்து உள்ளனர். நானோ வைரத் துகள்களை பாலியூரிதேன் முதலிய பொருட்களுடன் சேர்த்து திரவமாக்கி சாதாரண பருத்தி ஆடைகளில் பூச்சு போல் பூசினார்கள். சிறிது காய்ந்ததும், பருத்தி நார்களுடன் நானோ துகள்கள் நன்றாகப் பிணைந்து இருந்தன. பூச்சு செய்யப்பட்ட துணியை, 100 டிகிரி வெப்ப நிலைக்குச் சூடாக்கப்பட்ட தட்டின் மீது 10 நிமிடங்கள் வைத்தனர். கூடவே பூச்சு செய்யப்படாத துணியும் வைக்கப்பட்டது. பிறகு 10 நிமிடங்கள் ஆற வைத்தனர். பூசப்படாத துணியை விடப் பூசப்பட்ட துணி 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பத்தை இழந்திருந்தது. அதாவது, பூசப்பட்ட உடை அணிபவர் உடலில் இருந்து வெப்பத்தைக் கடத்தி வெளியேற்றும். புற ஊதாக் கதிர்களிலிருந்தும் அணிபவர் உடலைப் பாதுகாக்கும் தன்மையும் இந்த உடைக்கு உள்ளது.கட்டடங்கள் வெப்பமடைவதைத் தடுக்க இந்த நானோ வைரங்கள் உதவுமா என்று அறிவதற்கான ஒரு முன்னோட்டம் தான் இந்த ஆய்வு. ஒருவேளை அப்படி உதவினால் குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைக்கலாம். இது சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும்.