சோதனையை எளிமையாக்கும் எலி
உலக வரலாற்றில் முதன்முறையாக மனித எலிகளை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். மனிதர்களைப் போலவே இருக்கும் மனிதக் குரங்குகளைத் தெரியும். அது என்ன மனித எலிகள்? மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அப்படியே தங்களுக்குள் கொண்டவை தான் மனித எலிகள். இவை மரபணு மாற்றப்பட்டவை. இப்படியான மனித எலிகளை உருவாக்கும் முயற்சி 1980களிலேயே துவங்கிவிட்டது என்றாலும் தற்போது தான் வெற்றி கிட்டியுள்ளது. இவற்றின் குடல் நுண்ணுயிர்களும் மனிதக் குடல்களில் உள்ளது போலவே இருக்கும். மருத்துவ சோதனைகள் செய்யவே இவை உருவாக்கப்பட்டுள்ளன.பொதுவாகவே எலிகள் தான் பெரும்பாலான சோதனைகளில் பயன்படுகின்றன. ஆனால், அவற்றின் மரபணு நம்மை விட மாறுபட்டவை. அதனால் நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்திலிருந்து அவற்றின் நோயெதிர்ப்பு மண்டலம் மாறுபடுகிறது. இந்தக் காரணத்தினால் தான் சில சோதனைகளை அவற்றின் மீது செய்யமுடிவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு மரபணு மாற்றப்பட்ட எலிகளை அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இவற்றுக்கு டி.ஹெச்.எக்ஸ். (THX - truly human) என்று பெயரிடப்பட்டுள்ளது. இவற்றின் மீது மருந்துகள், பாக்டீரியா, வைரஸ்களுக்கு எதிரான தடுப்பூசிகளைச் சோதிக்க முடியும். இதில் ஒரு மருந்து வேலை செய்தால் எந்த பயமும் இன்றி மனிதர்கள் மீது அதனைச் சோதிக்கலாம்.