உள்ளூர் செய்திகள்

செவ்வாயின் தரைக்கு ஏற்ற டயர்

எதிர்காலத்தில் செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். அப்போது, செவ்வாயில் தரையிறங்கி அதன் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும் வகையிலான வாகனங்கள் தேவைப்படும். செவ்வாயின் நில அமைப்பு கரடுமுரடானது; கடினமான பாறைகளால் ஆனது. இதனால், பூமியில் நாம் பயன்படுத்துகிற சாதாரண ரப்பர் டயர் பொருத்திய வாகனங்களை அங்கே இயக்க முடியாது. நீண்ட காலமாக இது ஒரு சிக்கலாக இருந்து வருகிறது.தற்போது அமெரிக்காவின் நாசா, இதற்கு ஒரு தீர்வு உருவாக்கியுள்ளது. வழக்கமான டயர்களுக்கு பதிலாக, உலோக மெஸ் (Wire mesh), அதாவது கம்பிகளால் ஆன வலைகளை வைத்து இந்த டயர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கம்பிகள் இரும்பாலானவை அல்ல; நிக்கல் - டைட்டானியம் உலோகக் கலவையால் ஆனவை. இந்தக் கலவையின் சிறப்பம்சம் என்னவென்றால், இதன் மீது ஒரு விசை செலுத்தப்பட்டால், இது தன் அணு கட்டமைப்பை மாற்றிக் கொள்ளும். அந்த விசை விலகிய பின், தன்னுடைய பழைய நிலைக்கு மாறிக்கொள்ளும்.இதை நாசா, செவ்வாய் கிரகம் போலவே செயற்கையாக பூமியில் உருவாக்கப்பட்ட மாதிரி நிலப்பரப்பின் மீது சோதித்து பார்த்தது. அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்தது. எனவே, எதிர்காலத்தில் செவ்வாயில் பயணம் செய்யும் வாகனங்களில் இந்த வகை டயர்கள் பயன்படும் என்று எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !