பக்கவாதத்தை கண்டறியும் பக்கா செயலி
மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் வருவது பக்கவாதம். இது ஏற்பட்டவுடன் மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம். இதன் அறிகுறிகள் தெளிவில்லாதவை. சில நேரங்களில் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதையே அறிய இயலாது. அதற்கென்ற தனிப்பட்ட சோதனைகள் செய்யப்பட்ட பின்பே சிகிச்சை தரப்படும். இதனால் மருத்துவம் செய்ய தாமதம் ஆகிறது. எனவே அறிகுறிகளை வைத்து பக்கவாதம் ஏற்படுவதற்கு முன்பே அறிய முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.இதற்காக ஆஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.டி., பல்கலை ஆய்வாளர்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தக்கூடிய செயலி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்தச் செயலி செயற்கை நுண்ணறிவினால் செயல்படும். பாதிக்கப்பட்டவரைச் சிரிக்கச் சொல்லி வீடியோ எடுத்தால் போதும். சிரிக்கும்போது முகத்தில் உள்ள தசைகளைப் பகுதி பகுதியாகப் பிரித்து இந்தச் செயலி ஆய்வுக்கு உட்படுத்தும். தசைகளின் அசைவு ஒன்றுபோல் சமச்சீராக இல்லை என்றால் சிரிக்கின்ற நபருக்குச் சமீபத்தில் பக்கவாதம் வந்துள்ளது என்று செயலி கூறிவிடும். இந்தச் செயலி சரியாகச் செயல்படுகிறதா என்று அறிவதற்காக ஆரோக்கியமான நபர்கள், சமீபத்தில் பக்கவாதம் வந்த நபர்கள் ஆகிய இரு தரப்பினரையும் அழைத்து சிரிக்கச் சொல்லி வீடியோ எடுத்தனர். இந்தச் செயல் 82 சதவீதம் சரியான முடிவைத் தந்தது. தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் வாயிலாக இன்னும் துல்லியமான முடிவுகள் பெற முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதே போன்ற ஒரு செயலியை அமெரிக்காவைச் சேர்ந்த பென்சில்வேனியா மாநிலப் பல்கலை உருவாக்கி உள்ளது. இந்தச் செயலி பயன்பாட்டிற்கு வந்தாலும் கூட சிக்கலான சூழலில் பக்கவாதத்தைக் கண்டறிய மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் எடுத்துப் பார்க்கும் நடைமுறை தொடரவே செய்யும் என்கின்றனர் மருத்துவர்கள்.