உள்ளூர் செய்திகள்

தாவர உணவுகளால் ஏற்படும் நன்மைகள்

பச்சை காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் முதலிய தாவர உணவுகளின் நன்மைகள் பற்றி பல்வேறு ஆய்வுகள் ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த வியன்னா பல்கலை, முக்கியமான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. இதில், தாவர உணவுகளை உட்கொண்டால், வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 24 சதவீதம் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. பரம்பரையாக சர்க்கரை வியாதி, உடல் பருமன் உள்ளவர்களுக்கும் கூட இது பொருந்தும் என்கிறது ஆய்வு.அதிக சர்க்கரை உள்ள பானங்கள், தீட்டப்பட்ட தானியங்கள் (Refined grains), இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தி, வகை 2 நீரிழிவு நோயை ஏற்படுத்தும். இங்கிலாந்தில் உள்ள பயோ பேங்கில், 1,13,097 பேரின் 12 ஆண்டுகளுக்கான மருத்துவத் தரவுகள் சோதிக்கப்பட்டன. இவற்றில், தாவர உணவுகளை உண்பதால் ரத்த சர்க்கரை அளவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் சதவீதமும் குறைவது தெரிய வந்துள்ளது. அது மட்டும் இல்லாமல், சிறுநீரகம், ஈரல் ஆகிய உடல் உறுப்புகளின் செயல்பாடு இதனால் ஊக்கப்படுத்தப்படுகிறது என்றும் தெளிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !