உள்ளூர் செய்திகள்

உமிக்கு வந்த வாழ்வு!

வெப்ப மண்டல நாடுகளில், வீட்டில் வெப்பத்தை குறைப்பதற்காக குளிரூட்டிகள் பயன்படுகின்றன. இவற்றை இயக்க அதிக அளவு மின்சாரம் தேவை. இதற்கு பதிலாக, கட்டுமானத்தில் சில பொருட்களை பயன்படுத்தி வெப்பம் உள்ளே வருவதை தடுக்க முடியும். அந்த வகையில் பனாமா நாட்டைச் சேர்ந்த பனாமா தொழில்நுட்ப பல்கலை விஞ்ஞானிகள், நெல் உமியை கட்டுமானப் பொருட்களுடன் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்து உள்ளனர்.மத்திய அமெரிக்க நாடான பனாமா வெப்ப மண்டல பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நெல் விளைச்சலும் அதிகம். இதனால் அபரிமிதமாக நெல் உமி கிடைக்கிறது. இதை செய்தித்தாள் கூழுடன் சேர்த்து, அவற்றிலிருந்து செல்லுலோஸை மட்டும் தனியே பிரித்தெடுக்கின்றனர். பின்னர் பசை, போராக்ஸ் ஆகியவற்றை பல்வேறு விகிதங்களில் கலந்து, அவற்றின் வெப்பம் கடத்தும் தன்மையை சோதித்துப் பார்த்தனர். போராக்ஸ் என்பது தீப்பிடிக்காமல் தடுக்கவும், பூஞ்சைகள் வளராமல் இருக்கவும் சேர்க்கப்படுகிறது. சோதனையில் இதன் வலிமை, வெப்பம் கடத்தும் தன்மை போதுமான அளவு இருப்பது தெரிய வந்தது. விரைவில் இது மேம்படுத்தப்பட்டு, கட்டுமானப் பொருளாக பயன்பாட்டிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !