உள்ளூர் செய்திகள்

மருத்துவ கழிவுகளால் மீன்களுக்கு ஆபத்து

மனிதன் தன்னைச் சுற்றியுள்ள உயிரிகளுக்குத் தன்னை அறியாமலேயே எண்ணற்ற தீமைகள் செய்து வருகிறான். தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்வதற்குள், அந்த உயிரினங்கள் காப்பாற்ற இயலாத நிலைக்குச் சென்றுவிடுகின்றன.நெகிழிக் குப்பைகளால் நீர் நிலைகளும், நீர் வாழ் உயிரினங்களும் எப்படிப் பாதிக்கப்படுகின்றன என்பது குறித்து நிறைய ஆய்வுகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. தற்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மொனாஷ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், மருத்துவக் கழிவான ஃப்ளூக்ஸிடைன் (Fluoxetine) எவ்வாறு மீன்களைப் பாதிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கான கிலோ மருத்துவக் கழிவுகள் நீர்நிலைகளில் கொட்டப்படுகின்றன. அவற்றிலிருந்து நீரில் கலக்கும் ரசாயனங்கள் ஆபத்தானவை. ஃப்ளூக்ஸிடைன் எனும் மருந்து கழிவை நீரில் கலந்தபோது கப்பி (Guppy) எனும் ஒருவகை மீன்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது ஆய்வில் தெரிந்தது. இந்த மருந்து, மீன்களின் உடலுக்குள் செல்வதால் அவற்றின் உடல் இயக்கம் தடை படுகிறது. குறிப்பாக ஆண் மீன்களால் இனப்பெருக்கம் செய்யமுடியாமல் போகிறது. பிற ஆண் மீன்களுடன் போட்டியிடும் ஆற்றலையும் இழக்கின்றன. இதனால் அந்த மீன் இனம் அழியும் அபாயத்தில் உள்ளது. மனிதர்கள் தங்கள் தவறுகளைச் சரிசெய்து கொள்ளவில்லை என்றால், பல உயிரினங்கள் அழிந்துபோக வாய்ப்புள்ளது என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 05, 2024 10:01

மலையாளிகளுக்கு மீன் பிடிக்கும் ...... அவங்க ஊரு மருத்துவ கழிவுகளை ஆண்டாண்டு காலமாய் தமிழகத்தில் கொட்டுறாங்க ..... அப்போ கேரள மீன்கள் பாதுகாப்பாத்தானே இருக்கும் ????