கரையும் கிரீன்லாந்து பனிச்சிகரம்
கிரீன்லாந்து நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ப்ருதோ பனிச்சிகரத்தில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆழ்துளை ஆய்வு, ஓர் அதிரடி உண்மையைத் வெளிப்படுத்தியுள்ளது. ஏறத்தாழ 500 மீட்டர் ஆழம் துளையிட்டு ஆய்வு செய்ததில், இந்த மாபெரும் பனிச்சிகரம் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலுமாக மறைந்து போயிருந்தது தெரியவந்துள்ளது.'கிரீன் ட்ரில்' திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள், நவீன கருவிகள் மூலம் பனிப்பாறைகளுக்கு அடியில் உள்ள படிமங்களைச் சேகரித்தனர். ஒளிர்வுக் காலக் கணிப்பு (லுமினசென்ஸ் டேட்டிங்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்தப் படிமங்களை ஆய்வு செய்தனர். அதில் அவற்றின் மீது ஒரு காலத்தில் பனிக்கவசமில்லாமல், நேரடியாக சூரிய ஒளி பட்டிருந்தது உறுதியானது.ஏறத்தாழ 7,000 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய வெப்பநிலையானது, இன்றைய வெப்பநிலையை விட மிகச் சிறிய அளவே அதிகமாக இருந்தது. ஆனால், அந்தச் சிறிய மாற்றமே ஒட்டுமொத்தப் பனிச்சிகரத்தையும் கரைத்துவிட்டது. இது, கிரீன்லாந்தின் பனிப்பரப்பு, விஞ்ஞானிகள் கணித்திருந்ததைவிட வெப்பத்தால் மிக எளிதாகப் பாதிக்கப்படக்கூடியது என்பதைக் காட்டுகிறது.புவி வெப்பமயமாதல் தற்போதைய வேகத்தில் தொடர்ந்தால், இந்த ஆதி கால நிகழ்வு மீண்டும் நிகழக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். கிரீன்லாந்தின் பனிப்பகுதிகள் உருகுவது உலகளாவிய கடல் மட்டத்தை உயர்த்தி, கடலோர நகரங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும். கடந்த காலத்தில் நடந்த இந்த நிகழ்வு, எதிர்காலக் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பித்துள்ளது.