புதிய உச்சம் தொடும் மக்கள்தொகை
உலகின் தற்போதைய மக்கள்தொகை 812,35,18,311. இது இன்னும் பெருகுமா குறையுமா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஐ.நா. மக்கள்தொகைப் பிரிவு வெளியிட்ட உலக மக்கள்தொகை 2024 அறிக்கை கவனம் பெற்றுள்ளது. அதில் கடந்தகால மக்கள்தொகைப் பெருக்கத்தை வைத்து, எதிர்காலத்தில் எப்படிப் பெருகும் என்பது குறித்த ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன.இதன்படி கடந்தாண்டுகளில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதால், மக்கள்தொகை வளர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது. இதற்குக் கருக்கலைப்பு வசதிகளின் பரவலாக்கம், உயரும் பெண்கல்வி, சமய, சமுதாய நம்பிக்கைகளின் மாற்றம், நகரமயமாக்கல், குழந்தை வளர்ப்பிற்கு ஆகும் அதீத செலவு ஆகியவை முக்கிய காரணங்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தியா, ஜெர்மனி முதலிய நாடுகளில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. உலகிலேயே மிகக் குறைவாக உள்ளது தென்கொரியாவில் தான். ஆப்பிரிக்க நாடான நைஜரில் மிக அதிகமான பிறப்பு விகிதம் உள்ளது. சராசரியாக ஒரு பெண் ஆறு குழந்தைகளுக்கு மேல் பெறுகிறார். ஆப்ரிக்க நாடுகளில் தான் உலகிலேயே அதிகமான பிறப்பு விகிதம் உள்ளது. இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு கணிக்கும்போது 2084இல் உலக மக்கள்தொகை 1,002 கோடியைத் தொடும் என்றும் அதற்குப் பின்னர் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.