நீரிழிவுக்கு நிரந்தர தீர்வு
நம் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் தான் இன்சுலினைச் சுரக்கின்றன. உயருகின்ற ரத்த சர்க்கரையை இன்சுலின் தான் கட்டுப்படுத்துகிறது. இந்தச் செல்கள் சிதைவுற்றாலோ, போதுமான இன்சுலின் சுரக்காவிட்டாலோ நீரிழிவு நோய் ஏற்படும். இதைச் சரிசெய்ய இன்சுலினை உடலில் ஊசிமூலம் செலுத்துவதே ஒரே தீர்வாக உள்ளது.பாதிக்கப்பட்ட பீட்டா செல்களைப் பழையபடி இன்சுலினைச் சுரக்கச் செய்ய சில ஆய்வுகள் சமீபத்தில் நடத்தப்பட்டன. ஆய்வுக்கூடத்தில் பீட்டா செல்களை வளர்த்து அவற்றை மனித உடலில் பொருத்துவது ஒரு வழி. ஆனால், இதை விடச் சிறந்த வழி மனித உடலிலேயே அவற்றை வளரச் செய்வது. இது சுலபமானதல்ல. இதற்குச் சரியான வழியை அமெரிக்காவின் மவுன்ட் சினாய் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். இதன்படி இரு மருந்துகள் பயன்படுகின்றன. அதில் ஒன்று ஹார்மைன். இது இயற்கையாகவே குறிப்பிட்ட சில தாவரங்களில் இருக்கும். இது நம் பீட்டா செல்களில் உள்ள DYRK1A எனும் நொதியை உருவாக்க வல்லவை. மற்றொன்று GLP1 எனும் மருந்து.விஞ்ஞானிகள் டைப் 1, 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எலிகளின் உடலில் முதலில் மனித பீட்டா செல்களைப் பொருத்தினர். பின்பு மேற்கண்ட மருந்துகளைச் செலுத்திச் சோதித்தனர். 3 மாதங்களில் எலிகள் உடலில் பீட்டா செல்கள் 700 சதவீதம் அதிகரித்தன. நீரிழிவு நோய் நீங்கியது. மருத்துவ சிகிச்சையை நிறுத்திய பின்பும் நோய் திரும்ப வரவில்லை. முதன்முறையாக பீட்டா செல்களைப் பெருக்கும் வழிமுறை வெற்றி பெற்றுள்ளது.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு இது தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.