உள்ளூர் செய்திகள்

நீர் நிலைகளை காக்கும் சாலை

சாலைகளில் தொடர்ந்து வாகனங்கள் பயணம் செய்யும் போது ஏற்படும் உராய்வினால், டயர்களிலிருந்து '6PPD' என்ற வேதிப் பொருள் வெளியாகிறது. இது சூரிய ஒளி, ஓசோனுடன் வினைபுரிந்து '6PPD க்யூனோன்' (6PPDQ) எனும் நச்சுப் பொருளாக மாறுகிறது. சாலைகளின் மீது பெய்யும் மழை வாயிலாக இந்த நச்சு, நீர்நிலைகளை அடைகிறது. நீரில் வாழும் உயிரினங்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதைத் தடுப்பதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன.வழக்கமான சாலைகளுக்குப் பதிலாக, நீர்ப் புகுதலை அனுமதிக்கும் 'ஊடுருவத்தக்க சாலைகள்' (Permeable pavements) அமைப்பது இதற்குத் தீர்வாக அமையும் என்று அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலை கண்டறிந்துள்ளது. இந்தச் சாலைகள் வழக்கமான சாலைகள் போல் அன்றி, சிறு துளைகள் நிறைந்து இருக்கும். மழை பெய்யும் போது இந்தச் சாலையின் துளைகள் வழியே தண்ணீர் மட்டும் ஊடுருவும். பெரும்பாலான மாசுகள் சாலை மீதே தங்கிவிடும்.வாஷிங்டன் பல்கலை விஞ்ஞானிகள் கான்கிரீட் சாலை, ஊடுருவத்தக்க சாலை இரண்டையும் சோதனைக்கு உட்படுத்தினர். அவற்றின் மீது டயர் துகள்கள் கலந்த தண்ணீரை ஊற்றினர். அவற்றின் மீது பட்டு வெளியேறிய நீரை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். கான்கிரீட் சாலையைக் கடந்து வந்த நீரில், டயர் துகள்கள் அதிகளவு இருந்தன. அதுவே ஊடுருவத்தக்க சாலையைக் கடந்து வந்த நீரில், 4 சதவீத டயர் துகள்கள் மட்டுமே இருந்தன. அதாவது 96 சதவீத டயர் துகள்களை ஊடுருவத்தக்க சாலை தடுத்து வைத்துவிட்டது. இதன் வாயிலாக, 68 சதவீத 6PPDQ நச்சு சாலையிலேயே தங்கிவிட்டது. ஆகவே இவற்றை அமைத்தால் நீர்நிலைகளின் மாசுபாடு குறையும்.ஊடுருவத்தக்க சாலைகள், கான்கிரீட் சாலைகளின் அளவுக்கு வலிமை மிக்கவை அல்ல. அத்துடன் இப்போதுள்ள பழைய சாலைகள் அனைத்தையும் மாற்றுவதும் சுலபமான காரியமன்று. எதிர்காலத்தில் ஊடுருவத்தக்க சாலைகளின் வலிமையை அதிகரிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதற்குப் பின்னரே அவை பயன்பாட்டிற்கு வரும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
பிப் 22, 2024 08:39

இச்சாலைகளில் ஊடுருவும் துளைகள் வெகு சீக்கிரம் ரப்பர் துகள்களினால் அடைத்துக் கொண்டுவிடும்