01. குறைவான மாவுச்சத்து, அதிக கொழுப்பு, மிதமான புரதச் சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது 'கீடோ' உணவு முறை. அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை இந்த உணவு முறையைக் கடைப்பிடிப்பது, அல்சைமர் நோய் ஏற்படுவதைத் தாமதப்படுத்தும் எனக் கண்டறிந்துள்ளது.
02. இலைத்தத்திப் பூச்சிகளின் உடல், 'ப்ரோசோசோம்ஸ்' எனப்படும் நானோ பொருட்களால் நிறைந்துள்ளது. இவை, இந்தப் பூச்சிகளைப் புற ஊதாக் கதிர்களிடமிருந்து காப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த பென்சில்வேனியா பல்கலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த 'ப்ரோசோசோம்'களை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கி, சூரிய மின்தகடுகளிலும், மற்றவற்றிலும் பயன்படுத்தலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
03. நம் குடல், வயிற்றுப் பகுதிகளில் வாழும் 'ஹெலிகோபாக்டர் பைலோரி' எனும் பாக்டீரியா பொதுவாக ஆபத்தற்றது என்று அறியப்பட்டு வந்தது. சமீபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த நான்யாங் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், வயிற்றில் புற்றுநோயை ஏற்படுத்துவதில் இந்த பாக்டீரியா முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிய வந்துள்ளது.
04. புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு அதிகளவிலான மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு மூளையில் 'ப்ரெய்ன் ஃபாக்' எனப்படும் நினைவாற்றல் குறைபாடு ஏற்படும். இதை 40 ஹெர்ட்ஸ் அதிர்வெண் உடைய ஒலி, ஒளியைக் கொண்டு சரி செய்ய முடியும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மாசசூசெட்ஸ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
05. ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் பால் விநியோகம் செய்யும் ட்ரோன் சேவை வரும் மே மாதத்தில் துவங்கப்படுகிறது. 12 கி.மீ., துாரம் பயணம் செய்யக்கூடிய இந்த ட்ரோனால் ஒரு பயணத்தில் 4 கிலோ, அதாவது 10 லிட்டர் பால் வரை சுமந்து செல்ல முடியும்.