அறிவியல் துளிகள்
01. ஆர்டிக் பகுதிகளில் வாழும் ரெய்ன் டீர் (Rein deer) மான்கள், குறுகிய காலமே நீடிக்கும் கோடைக் காலத்தில், ஒரு நாளின் பெரும்பாலான நேரம், அதிகளவிலான உணவை விரைவாக விழுங்குகின்றன. பின் ஓய்வு நேரத்தில் துாங்கியபடியே அசை போடுகின்றன. இந்த வினோத பழக்கம் இவற்றுக்கு இருப்பது, சமீபத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சூரிச் பல்கலை விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.02. சுவீடன் நாட்டில், முழுதும் மரத்தாலான காற்றாலை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 150 மீட்டர் உயரமுடைய இது, 400 வீடுகளுக்கு தேவையான 2 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.03. புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு, புற்று நோய் வரும் என்பதை அறிவோம். ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று, புகையால் நினைவாற்றல் தொடர்பான அல்சைமர் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.04. பேரிடர் காலத்தில், கட்டட இடிபாடுகள் இடையே சிக்கியவர்களை மீட்க ட்ரோன்கள் உதவும். சில நேரங்களில் புகை, துாசிகள் இருந்தால், ட்ரோன் கேமரா மூலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய இயலாது. இதனால், அவர்களை ஒலியை கொண்டு கண்டறியும் லுாசி (LUCY) எனும் ஒலி அமைப்புடன் கூடிய ட்ரோனை ஜெர்மானிய விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.05. சீனாவின் சன் யாட் சென் பல்கலை ஆய்வாளர்கள், தனியாக வாழும் முதியோர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பை, செல்லப்பிராணிகளை வளர்ப்பதன் மூலம் குறைக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.