உள்ளூர் செய்திகள்

நேர்த்தியான புது இன்சுலின்!

நீரிழிவு நோய் உள்ளவர்களின் உடலில் இன்சுலின் சுரக்காததால், தினமும் ஊசி வாயிலாக இன்சுலினை எடுத்துக்கொள்ள வேண்டி உள்ளது. நோயின் தீவிரத்தை பொறுத்து, தினமும் எடுத்துக்கொள்ளும் யூனிட்டுகளின் அளவு கூடவோ, குறையவோ செய்யும்.தற்போது சீனாவைச் சேர்ந்த ஜீஜியாங் பல்கலை ஆய்வாளர்கள், 'ஸ்மார்ட் இன்சுலின்' என்ற புது வகை இன்சுலினை உருவாக்கிஉள்ளனர். இதை சாதாரண இன்சுலின் போல் அடிக்கடி இல்லாமல், வாரம் ஒரு முறை போட்டுக் கொண்டாலே போதும்; ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.இந்த ஸ்மார்ட் இன்சுலினில், இன்சுலின் ஹார்மோன், க்ளுகானிக் ஆசிட் எனும் ரசாயனத்துடன் சேர்ந்திருக்கும். உடலுக்குள் ஊசி வாயிலாக அனுப்பினால், உடனே ரத்தத்தில் கலக்காது. ரத்த சர்க்கரை அளவு (க்ளுகோஸ்) அதிகரிக்கும் போது மட்டும் இன்சுலின் ரத்தத்தில் கலந்து, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இது எவ்வாறு நடக்கிறது? இன்சுலினோடு இணைந்திருக்கும் வரை க்ளுகானிக் ஆசிட், இன்சுலினை செயல்பட விடாது. சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, உடலில் உள்ள க்ளுகோஸுடன் சுலபமாக சேரும் இயல்புடைய க்ளுகானிக் ஆசிட், இன்சுலினுடன் கொண்டிருக்கும் இணைப்பை இழக்கும். இதன் வாயிலாக, இதுவரை செயல்படாத நிலையில் இருந்த இன்சுலின் செயல்படத் துவங்கும்.ஸ்மார்ட் இன்சுலினின் மிக முக்கியமான நன்மை என்னவென்றால், தேவையில்லாத நேரத்தில் இன்சுலினை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க முடிகிறது என்பதே. இதன் வாயிலாக, அனாவசியமான இன்சுலின் நுகர்வு குறைகிறது. இது எலிகள் மீது சோதிக்கப்பட்டு வெற்றியடைந்ததை தொடர்ந்து, மனிதர்கள் மீது சோதிக்கப்பட உள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sampath Kumar
ஜன 05, 2024 09:53

இது ஆபத்தானது ஏன் என்றால் இந்த மருந்தை செலுத்தி இன்சுலின் இயற்கையாகவே சுரக்க வைக்கும் உணவுகளுடன் சேரும் பொது ரத்தத்தில் சர்க்கரை அள்ளுவோ குறிக்கும் அப்புறம் இந்த மறுத்தால் உள்ள ஆசிட் தாணு செயல் பட்டை செய்ய முடியாமல் தவிக்கும் அதனால் இதை ஏடுபவர்கள் இயற்கை இன்சுலின் சுரக்க வைக்கும் உண்ணவுகளை தவிர்க்க வேண்டும் இல்லாவிட்டால் தவிக்க வேண்டும்