கண்ணாடி தகடின் நினைவாற்றல்!
ஒரு சாதாரண கண்ணாடித் துண்டில், 20 லட்சம் புத்தகங்களை பதிந்துவிட முடியுமா? முடியும் என்கின்றனர் மைக்ரோசாப்ட்டின் 'சிலிக்கா' நினைவகத் திட்டத்தின் ஆராய்ச்சியாளர்கள். ஓர் உள்ளங்கை அளவில் இருக்கும் சாதா கண்ணாடியில், கிட்டத்தட்ட 20 லட்சம் புத்தகங்களுக்கு இணையான தரவுகளைச் சேமிக்க முடியும் என்று செய்துகாட்டியுள்ளனர். இதில், 'பெம்டோசெகண்ட்' (femtosecond) லேசர் கதிர்களைப் பயன்படுத்தி, கண்ணாடியின் உட்புற அடுக்குகளில் முப்பரிமாண வடிவில் தகவல்கள் பதிந்துள்ளனர். தரவுகள் மேற்பரப்பில் மட்டுமன்றி ஆழமான அடுக்குகளிலும் சேமிக்கப்படுவதால், கண்ணாடி மிக அடர்த்தியாகிறது. இது, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் சிதையாமல் இருக்கும் வலிமை கொண்டது. காந்தத் தட்டுகளுக்குப் பதிலாக, செறிவூட்டப்பட்ட ஒளிக்கற்றைகள் கண்ணாடியின் உட்புற அமைப்பை செதுக்கி தகவல்களைப் பதிகின்றன. ஒரு புத்தகத்தின் பக்கங்களைப் போலப் பல அடுக்குகளில், 'டெராபைட்' கணக்கான தரவுகள் இதில் அடுக்கப்படுகின்றன.இதற்காகத் தகவல்களை எழுதுவதற்கும், படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்குமான முழுமையான தொழில்நுட்பக் கட்டமைப்பை ஆராய்ச்சியாளர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர். ஹார்ட் டிஸ்க்கை விடக் கண்ணாடிகள், வெப்பம், அரிப்பு, சிதைவைத் தாங்கும் திறன் கொண்டவை. எனவே, நீண்ட கால தகவல் பாதுகாப்பையே முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது. மனித நாகரிகங்கள் மறைந்தாலும் நிலைத்திருக்கக்கூடிய ஒரு நிரந்தரத் தகவல் களஞ்சியமாக 'சிலிக்கா' விளங்கும்.