உள்ளூர் செய்திகள்

செயற்கை நுண்ணறிவு விரிக்கும் இயற்கை வலை

வீ ட்டுப்பூனை ஒன்று சிறுத்தையை நேருக்கு நேர் எதிர்க்கிறது. முதலைகளின் முதுகில் ரக்கூன்கள் சவாரி செய்கின்றன. இதுபோன்ற வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் பார்த்திருக்கிறீர்களா? இவையெல்லாம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலிகள். இவை உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வித்தியாசத்தை அழித்து, கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றி வருவதாக ஸ்பெயினின் கோர்டோபா பல்கலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய ஏ.ஐ., வீடியோக்கள், விலங்குகளின் இயல்புக்கு மாறான, இயற்கையில் சாத்தியமில்லாத காட்சிகளையே சித்தரிக்கின்றன. மூர்க்கமாக வேட்டையாடும் குணமுள்ள காட்டு விலங்குகள், சாதுவான செல்லப்பிராணிகள் போல வீடுகளுக்குள் நுழைவது, இரையாகும் விலங்குகள், வேட்டையாடும் விலங்குகளுடன் விளையாடுவது போன்றவையும் இதில் அடக்கம். பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும், வனவிலங்குகளின் உண்மையான இயல்பை இவை திரித்துக் காட்டுகின்றன. இது வெறும் வேடிக்கையோடு முடிவதில்லை. இத்தகைய தவறான சித்தரிப்புகள், விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நடத்தை குறித்த பொய்யான நம்பிக்கைகளை மக்களிடம் விதைக்கின்றன. இதனால் உண்மையான வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சூழலியல் சவால்கள் குறித்த விழிப்புணர்வு மழுங்கடிக்கப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளிடமும், சூழலியல் அறிவு குறைந்தவர்களிடமும் இயற்கையுடனான உண்மையான தொடர்பை இது துண்டிக்கிறது. செயற்கையான பிம்பங்கள், நிஜம் போலவே வளைய வரும் இந்தக் காலத்தில், வனவிலங்குகளின் இயல்பு பற்றிய ஊடகக் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி கட்டாயமாகிறது என்று இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. ஒரு வீடியோவைப் பார்க்கும்போது, 'இது நிஜம்தானா?' என்று கேள்வி கேட்கப் பழகுவது, காடுகளைப் பாதுகாப்பதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றைக்கு மாறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !