ஒளியில் ஒளிந்திருக்கும் காந்தத்தின் சக்தி
ஒளி என்பது மின்புலம் மற்றும் காந்தப்புலம் ஆகிய இரண்டும் இணைந்த ஒரு மின்காந்த அலை. ஒளியானது ஒரு காந்தப் பொருளின் ஊடாகச் செல்லும் போது, ஒளியில் உள்ள 'மின்புலம்' மட்டுமே அந்தப் பொருளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் இவ்வளவு காலம் நம்பி வந்தனர். ஒளியின் மற்றொரு பகுதியான 'காந்தப்புலம்', எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் பலவீனமானது என்பதே அவர்களின் கருத்து. ஆனால், இஸ்ரேலில் உள்ள ஹீப்ரூ பல்கலை ஆய்வாளர்கள், அந்தக் கருத்தைத் தவறென நிரூபித்து உள்ளனர். ஒளியின் அந்த 'பலவீனமான' காந்தத்தன்மைதான், 'பாரடே விளைவு' எனப்படும் ஒளிச் சுழற்சிக்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் பகுப்பாய்வு, ஒளியியல் ஆய்வகங்களில் பரவலாகப் பயன்படும் 'டெர்பியம் காலியம் கார்னட்' (Terbium Gallium Garnet -- TGG) என்ற படிகத்தை மையமாகக் கொண்டது. 'சுழல் இயக்கவியல் மாதிரி' (Spin-dynamics model) என்ற முறையைப் பயன்படுத்தி, அகச்சிவப்புக் கதிரில் உள்ள அலைவுறும் காந்தப்புலம், ஒரு சிறிய, வேகமாகச் சுழலும் காந்தம் போலச் செயல்படுவதை அந்தக் குழு கண்டறிந்தது. ஒளியின் இந்தச் சுழற்சியானது, அந்தப் படிகத்தில் உள்ள அணுக்களின் சுழற்சியின் மீது ஒரு திருப்பு விசையைச் (Torque) செலுத்துகிறது. இதற்குக் காரணம் மின்புலம் மட்டுமே என்று முன்பு கருதப்பட்டது. ஆனால், ஒளியின் காந்தப்புலம்தான் அந்தச் சுழற்சியில் 70 சதவீதம் வரை பங்களிக்கிறது என்று ஆய்வாளர்கள் அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு, ஒளி குறித்த 180 ஆண்டுகால அறிவியல் அனுமானத்தைத் திருத்தி எழுதுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு, தற்போது எலக்ட்ரானிக்ஸ் துறைக்குப் போட் டியாக வேக மாக வளர்ந்து வரும் 'ஸ்பின்ட்ரானிக்ஸ்' (Spintronics), ஒளிவடிவத் தகவல் சேமிப்பு (Optical storage) மற்றும் மிகவேகமான காந்த-ஒளியியல் நிலைமாற்றம் (Magneto--optical switching) போன்ற துறைகளில், புதிய முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும்.