ஒரு மணி நேரத்தில் உலகின் மறுபக்கம் போகலாம்!
ஒலியின் வேகத்தை மிஞ்சி விமானங்கள் பறப்பதற்குத் தடையாக, காற்றியக்கவியலில் ஒரு புதிர் இருக்கிறது. அந்தப் புதிரை அமெரிக்காவிலுள்ள ஸ்டீவன்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், விடுவித்துள்ளனர். மாதிரி ஹைப்பர்சோனிக் விமானங்களை 'காற்றுச் சுரங்க' சோதனைகளை அவர்கள் செய்து பார்த்தனர். ஒலியின் வேகத்தை விட ஆறு மடங்கு வேகமான 'மாக் 6' வேகத்தில் நடத்திய சோதனைகளில், காற்றின் படபடப்பு (turbulence) தாறுமாறாக இல்லாமல், மிகவும் கணிக்கக்கூடிய விதத்தில் தான் இருக்கிறது என்று ஸ்டீவன்ஸ் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதிவேகமாக எதிர்வரும் காற்றும், குறைவான வேகத்தில் பயணிக்கும் விமானங்கள் எதிர்கொள்ளும் காற்றும், காற்றியக்கவியலின் அடிப்படை விதிகளையே பின்பற்றுகின்றன என அவர்கள் தெரிவித்துள்ளனர். காற்றுப் படபடப்பின் பின்னால் உள்ள இயற்பியலை மறுபடியும் ஆராய வேண்டியதில்லை என்றால், விமான வடிவமைப்பாளர்கள், பிற சவால்களில் கவனம் செலுத்தலாம். உதாரணமாக, உந்தும் காற்றழுத்தம், எகிறும் வெப்பம், உடையும் பொருட்கள் போன்ற, சூப்பர்சோனிக் விமான வடிவமைப்பில் உள்ள பிற சவால்களில் கவனம் செலுத்தலாம். இந்தச் சவால்கள் தீர்க்கப்பட்டால், விமானங்கள் ஒருநாள் 'மாக் 10' வேகத்தில் பயணிக்க முடியும். சிட்னியில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரையிலான பயணம் 15 மணி நேரத்திற்குப் பதிலாக ஒரு மணி நேரமாகக் குறையலாம். ஆக, காற்றியக்கவியலில் இருந்த ஒரு புதிர் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, சூப்பர் சோனிக் விமானப் பயணம், பூமியின் தாழ் சுற்றுப் பாதையில் பயணம் போன்றவற்றுக்கு திறவுகோலை வழங்கியிருக்கிறது.