உள்ளூர் செய்திகள்

சாலை ஓரம் சோலையாக்கும் சோழன் குபேந்திரன்

கட்டுமான பணிக்காக பசுமை தரும் மரங்களை வெட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கட்டுமான பொறியாளர் சோழன் குபேந்திரன் ஓராண்டிற்குள் ஒரு கோடி மரக்கன்றுகளை நட இலக்கு தீர்மானித்து பயணித்து கொண்டிருக்கிறார். இதுவரை 93 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தும் வருகிறார். மதுரையை சோலைவனமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 37 வயதான இவர், வருமானத்தின் ஒருபகுதியை மரங்களுக்காக செலவிடுகிறார். தீபாவளி மலருக்காக இங்கே பேசுகிறார்...நான் பிறந்து வளர்ந்தது மதுரை மாவட்டம் சோழவந்தான். ஊர் பாசம் காரணமாக பெயருக்கு முன்னால் 'சோழன்' என சேர்த்துக்கொண்டேன். இப்போது வசிப்பது மதுரை காதக்கிணறு. பள்ளி படிப்பின்போதே மரக்கன்றுகளை நட ஆர்வமாக இருப்பேன். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அமைப்பில் சேர்ந்து அப்போதே நுாற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டேன். கல்லுாரி படிப்பு முடிந்ததும் 2012ல் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்ன வார்த்தைகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. 'இந்தியா 2020 வல்லரசு ஆவதோடு பசுமை வல்லரசுவாகவும் மாறும்' என்று சொன்னார்.அப்போதுதான் தினமும் 15 மரக்கன்றுகளை நட வேண்டும் என முடிவு செய்தேன். அதை இளைய தலைமுறையினருக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக 'இளம் மக்கள் இயக்கத்தை' ஆரம்பித்தேன். பிறந்தநாள், திருமண நாள் என எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆளுக்கு ஒரு மரக்கன்று நட வேண்டும் என விழிப்புணர்வு செய்ய ஆரம்பித்தேன். இதுகுறித்து மாணவர்களிடம் பேசினேன். ஏனெனில் அவர்கள்தான் இந்தியாவை வல்லரசாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்கள். எனது விழிப்புணர்வு பேச்சால் அவர்களிடமும், ஆசிரியர்களிடமும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. அப்படி நட்ட மரங்கள் இன்று மதுரை அழகர்கோவில் சாலையின் இருபுறமும் வளர்ந்து நிழல் தந்து கொண்டிருக்கிறது. தற்போது மதுரை ரிங் ரோட்டில் இருபுறமும் நட்டு வருகிறேன். தினமும் 15 மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். இதற்கிடையே '10 ஆண்டுகளில் எந்த நாடு காடுகளை வளர்த்து பராமரிக்கிறதோ அந்த நாடே பாதுகாப்பானது' என ஐ.நா., சபை தெரிவித்துள்ளதாக தினமலர் நாளிதழில் படித்தேன். அப்போது உருவானதுதான் ஆண்டிற்கு ஒரு கோடி மரங்கள் நடும் இலக்கு. இதுவரை 93 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு விட்டேன். அதை பராமரிக்க சொந்தமான மினி லாரி வாங்கி குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறேன். இதுவரை யாரிடமும் 'ஸ்பான்சர்' பெறாமல் என் வருமானத்தில் இருந்தே பராமரிக்கிறேன்.ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் மரக்கன்றுகளை வாங்குகிறேன். இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் மரக்கன்றுகள் சப்ளை செய்கின்றனர். அதனால் நானும் அங்கு வாங்கினேன். மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் தல விருட்சமான கடம்பம், நாட்டு வகைகளை சேர்ந்த மகிழம், புன்னை, வேங்கை, சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள மரங்கள் என பல அரிய மரக்கன்றுகளை நட்டு வருகிறேன். கடம்பம் மரக்கன்றுகள் மட்டும் 30 ஆயிரம் இருக்கும். பறவைகள்தான் காடுகளையும், புதிய மரங்களையும் உருவாக்கும் என்பதால் அவை சாப்பிடும் வகையில் நாவல், அத்தி உள்ளிட்ட மரக்கன்றுகளையும் நட்டு வருகிறேன் என்றார். இவரை வாழ்த்த 90800 26582


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்