உள்ளூர் செய்திகள்

மங்காத மனங்கவர் மணல் ஓவியங்கள்

ஓவியங்களில் எத்தனையோ வகைகள். அதில் மணல் ஓவியக்கலை கொஞ்சம் புதுசு. இதில் பல சாதனைகள் நிகழ்த்தி வருகிறார் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ராஜூ.குடும்ப சிரமத்தைக் குறைக்க படிப்பை பாதியிலேயே விட்டு, வேலைக்கு சேர்ந்தார். சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டிருந்ததால், பகலில் வேலை பார்த்துவிட்டு இரவில் கண் விழித்திருந்து ஓவியங்கள் வரைவார்.ஒரு கட்டத்தில், பலரும் ஓவியங்கள் வரைகின்றனர், நாம் அதில் இருந்து தனித்து தெரியவேண்டும் என்பதற்காக ஆற்று மணலை பதப்படுத்தி அதில் ஓவியம் வரையத்துவங்கினார். ஓரிடத்தை அல்லது படத்தை உள்வாங்கி, அதை பல கோணங்களில் வரைந்து பார்த்து பின் நிறைவாக இவர் வரையும் மணல் ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு முழு நேர மணல் ஓவியராகிவிட்டார்.இருபது ஆண்டுகளாக மணல் ஓவியம் வரைவது நாட்டிலேயே இவர் மட்டுமே. அந்த ஓவியங்களைக் கொண்டு பல்வேறு நகரங்களில் கண்காட்சி நடத்தியுள்ளார்.யானை,புலி, தஞ்சாவூர் பெரிய கோயில், கதகளி, காஞ்சி பெரியவர் உள்ளிட்ட மணல் ஓவியங்கள் தத்ரூபமாக, வியக்கும் வகையில் உள்ளது. நிறுவனங்கள் தங்களது விருந்தினர்களுக்கு அவர்களது படங்களையே மணல் ஓவியமாக வரைந்து பரிசாக கொடுப்பதால், தனது ஓவியத்திற்கு மிகப்பெரிய சந்தை மதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் ராஜூ.'ரா..வா' இருக்கும் மணலில் இருந்து எப்படி மணல் ஓவியம் உருவாகிறது...ராஜூவிடம் கேட்போம்...சாதாரண ஆற்று மணலை வீட்டிற்கு கொண்டு வந்து அதை மாவாகவும் இல்லாமல் கல்லாகவும் இல்லாமல் ஒரு பக்குவத்திற்கு சலித்து எடுத்துக் கொள்கிறேன். நான் ஏற்கனவே கறுப்பு போர்டில் வரைந்து வைத்திருக்கும் ஓவியத்தின் மீது விசேஷ பசை பூசுகிறேன். அந்தப் பசை மீது மிக நுணுக்கமாக மண்ணைத்துாவி கொள்கிறேன். ஓர் ஓவியத்தை முடிக்க சில நேரங்களில் ஒரு மாதமும் ஆகும்.வரையும் போது கவனம் சிதறக்கூடாது, பொறுமை தேவைப்படும் என்பதால் இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து அதிகாலை வரை வரைவேன் என்கிறார். இவர் 30 வருடங்களுக்கு முன்பு, வரைந்து கொடுத்த மணல் ஓவியம் இப்போதும் மங்காமல் அப்படியே தத்ரூபமாக இருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் அப்படியே இருக்கும் என்பதுதான் இந்த ஓவியத்தின் சிறப்பு.தொடர்புக்கு 78714 24384.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்