நாலு கோட்டையில் நண்டு வேட்டை மாறாத கிராமத்தின் கிக்
'என்னடா... லொக்கு... லொக்குனு இருமிக்கிட்டே இருக்க... கண்டத குடிச்சா இப்பிடி தான்... நாலு நண்டை பிடிச்சுட்டு வா... நசுக்கி ரசம் வெச்சுத் தாறேன்...' என மகனுக்கு அம்மாக்கள் சொன்ன பாட்டி வைத்தியத்தை நாம் பைத்தியக்காரத்தனம் என்று விமர்சித்தது உண்டு.நகரங்களை நோக்கி கிராமங்கள் நகர்ந்து கொண்டு இருக்க பழைய கஞ்சியை பார்க்காத தலைமுறைகள் உதயமாகிவிட்டன. உணவு, உடையில் கிராமங்கள் மாறினாலும் மரபுகளில் இன்னும் சில கிராமங்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு கிராமம் தான் சிவகங்கை அருகே நாலு கோட்டை.நண்டு வேட்டை தான் நாலுகோட்டையின் ஸ்பெஷல். என்னய்யா... இது? வேட்டைக்கு தான் நாட்டுல தடையிருக்கே... என நீங்கள் நினைக்கலாம். இது புள்ளிமான் வேட்டையல்ல... வரப்புகளின் பொந்துகளில் வாழும் நண்டு வேட்டை.கடல் மீனுக்கும், கண்மாய் மீனுக்கும் இருக்கும் வித்தியாசம் தான் கடல் நண்டுக்கும், வாய்க்கால் நண்டுக்கும் இருக்கும் வித்தியாசம். நல்லமழை பெய்து கண்மாய் பாசனம் இருந்தால் தான் வாய்க்கால் வரப்புகளில் நீரோட்டம் இருக்கும்.அந்த சமயத்தில் தான் நாற்றுகளுக்கு நண்டுகள் நாட்டாமையாக நிற்கும். அவை பயிரை மேயாது. ஆனால் அது குடியிருக்க வரப்பை துளையிடும் போது பாசன நீர் உடைப்பெடுக்கும். விவசாயிக்கு அதிகபட்ச தலைவலியே நண்டு துளையில் ெவளியேறும் நீரை சேகரிப்பதில் தான்.நீரை காப்பாற்ற, நண்டு வேட்டைக்காரர்களை பாசத்தோடு அழைப்பார் வயலுக்கு சொந்தக்காரர். 'என் வயலில் பிடி... உன் வயலில் பிடி...' என ஒரே அடிபிடியாக இருக்கும். ஆனால் நண்டுக்கு ஒரு விதமான தலைவலி கிராமத்தில் உண்டு. யாருக்காவது தலைவலி, ஜலதோஷம் என்றால் வாய்க்கல் நண்டு ரசம் தான் கிராமத்து 'பர்ஸ்ட் எய்டு'.கடந்த நான்கு ஆண்டுகளில் எதிர்பார்த்த மழை இல்லை விவசாயமும் இல்லை. கண்மாயும் காலி. இம்முறை போதும் என்கிற அளவிற்கு நல்ல மழை. வாய்க்கால் வரப்புகளில் ஓடும் நீரில் கூத்தாடி குடியேறியிருக்கிறது நண்டு கூட்டம்.'கடபுட' நண்டுகள் கரைபுரண்டோடுவதைப் பார்த்து வேட்டைக்கு கிளம்பிவிட்டது இளைஞர் கூட்டம். கையில் கம்போடு கிளம்பினால் நண்டு பிடிக்க தேவை என்னவோ நம் கரம் மட்டுமே. குழிக்குள் கைவிட்டு லாவகமாக நண்டை பிடிப்பதே தனிக்கலை. சிறு வயதிலிருந்தே அதற்கான பயிற்சி கிடைத்து இருப்பதால் பொந்துகளில் பயமின்றி கை வைக்கின்றனர். பிடிபட்ட நண்டுகளை ஊர் பொட்டலில் கொட்டி வேட்டையாளர்கள் பங்கிடுகின்றனர்.அப்புறம் என்ன அம்மாக்களிடம் செல்லும் நண்டு சிறிது நேரத்தில் ரசமாக கொதிக்கும் வாசம்... ஊரையே சுற்றி வரும். நண்டுகளை பிடிப்பதில் ஒரு 'எக்ஸ்பர்ட்' இருக்கிறார். அவர் பேரு நண்டுபிடி.''என் பேரு அழகரு. வயலில் திரியும் பூச்சி, புழுக்களை உண்டு வாழும் நண்டுக்கு தனி ருசி உண்டு. இரண்டு அடி வரை துளையிட்டு வாழும். அதை பிடிக்கும் போது சில நேரம் கடி விழும். நண்டு ரசத்தை நெனச்சுட்டே கடியை பொறுத்துக்கணும். பிடிப்பட்ட நண்டை சுத்தம் செஞ்சு மிளகு போட்டு கொதிக்க வெச்சு குடிச்சா... சளி, இருமல், காய்ச்சல் எதுவா இருந்தாலும் பிச்சுட்டு போயிடும்!'' என தன் அனுபவத்தை கொட்டினார் நண்டு பிடி!