எறும்புகள் ஏற தலைவணங்கிய ஈசன் - எறும்பீஸ்வரரை திருவெறும்பூரில் தரிசிக்கலாம்
பார் புகழும் பாரம்பரியம், விண்ணும் வியக்கும் வரலாற்றுடன் நகரும் தமிழக நகரங்களில் எல்லாம் திரும்பிய திசையெங்கும் தொல்லியல் சின்னங்கள் மெய்சிலிர்க்க வைத்து விடுகின்றன. அதில் ஒன்றாக, ஆன்மிகத்தின் அரணாக திகழும் திருச்சி திருவெறும்பூரில் உள்ள சோழ மன்னர்கள் கால எறும்பீஸ்வரர் மலை கோட்டை கோயிலுக்கு பயணிப்போமா...பல கோயில்களில் லிங்க வடிவாக வீற்றிருக்கும் ஈசன் திருவெறும்பூரில் எறும்பு புற்று வடிவில் உள்ளார். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இக்கோயிலில் உள்ள ஈசன் சுயம்புவாக, நறுமணம் வீசும் கூந்தல் கொண்ட அம்பாள் நறுங்குழல் நாயகியாக அருள்புரிகிறார்கள். கற்களை கொண்டு கோட்டை கட்டி அதற்குள் அழகிய கோயில் நிர்மாணித்துள்ளனர் சோழர்கள். இங்கு அரிய தகவல்களை தாங்கிய கல்வெட்டுக்கள் பல உள்ளன. எறும்பாக மாறிய தேவர்கள் திருவெறும்பியூர் என்ற இவ்வூர் பின் திருவெறும்பூர் ஆனது. தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என சண்டை வந்தது. அப்போது அவர்கள் உடைத்த மேரு மலையின் ஒரு பகுதியில் தான் இக்கோயில் உள்ளது. தாரகாசுரன் என்ற அரக்கன், தேவர்களை மிரட்ட பிரம்மா கூறியபடி அசுரன் கண்ணில் படாமல் இருக்க எறும்பாக மாறி ஈசனை வழிபட்டனர். எறும்புகள் ஏறுவதற்கு வசதியாக தன் தலையை வலப்புறமாக ஈசன் சாய்த்தார். இதனால் ஈசனை எறும்பீஸ்வரர் என அழைக்கின்றனர். இவரது இடப்புறம் புற்று அம்மன் உள்ளது. எறும்பு புற்று வடிவில் மூலவர் இருப்பதால் அவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. அதற்கு பதில் எண்ணெய் காப்பு மட்டுமே செய்யப்படும். பூஜையின் போது சுவாமிக்கு படைக்கும் நைவேத்தியத்தை எறும்புகள் எடுத்து செல்லுகின்றன. இங்கு உக்கிர சொர்ணகால பைரவர், கஜலட்சுமி, காசி விஸ்வநாதர், முருகன் சன்னதிகள் உள்ளன. கருவறை முன் உள்ள துவார பாலகர்களில் ஒருவர் முகம் கோபமாகவும், மற்றொருவர் சாந்தமாகவும் உள்ளது. கோபத்துடன் வருபவர்கள் கூட இவர்களை பார்த்து சாந்தம் ஆவர். இவரை வழிபட்டால் இழந்த பதவியையும், வாழ்வில் ஏற்றத்தையும் தருவார்.எப்படி செல்வதுதிருச்சியில் இருந்து திருவெறும்பூருக்கு பஸ் வசதி உள்ளது நடை திறக்கும் நேரம்: காலை 6:30 - மதியம் 12:00 மணி; மாலை 4:30 - இரவு 8:30 மணி தொடர்புக்கு: 99650 45666பொங்கலன்று வாசலில் மாக்கோலம் இடுவது சிறப்பு. எறும்பு போன்ற உயிர்கள் இதிலுள்ள அரிசிமாவை உண்பதால் புண்ணியம் சேரும். மாக்கோலம் இடும் வீட்டில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட (சகஸ்ர போஜனம்) புண்ணியம் கிடைக்கும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.