உள்ளூர் செய்திகள்

ஐ 10 படத்திற்கு சமம்

படத்துக்கு படம் பரீட்சார்த்த முயற்சிகள், வலிகள் நிரம்பிய வாழ்க்கைக்கு சொந்தக்காரர் சீயான் விக்ரம். உடல், பொருள், ஆவி அனைத்தும் அவருக்கு சினிமா மட்டுமே. 'ஐ' படத்திற்காக மூன்று ஆண்டுகள் தன்னை அர்ப்பணித்த அவரின் உழைப்பு ஒரு நிமிடம் ஓடும் டிரைய்லரில் கூட தெரிகிறது. இதோ தன் அனுபவங்களை 'தினமலர்' வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறார் 'சீயான்' விக்ரம்...வேறு படங்களில் நடிக்காமல் ஏன் இந்த மூன்று வருட தவம்?அவ்ளோ முக்கியமான கதாபாத்திரம் அது. நடிப்பிற்கு அவ்ளோ ஸ்கோப் இருந்தது. ஐ டிரைலர் பார்த்து அனைவரும் வியந்தது போலவே அதன் கதையை கேட்டு நானும் வியந்தேன். ஷங்கர் சார் கதை சொல்லி முடிஞ்சதுமே... 'சார்... எவ்ளோ நாள் ஆனாலும் பரவாயில்லை. வேறு படம் பற்றி சிந்திக்க போவதில்லை இந்த படம் மட்டும் பண்ணுவோம்னு...' சொல்லிட்டேன்.உடம்பை வருத்துவது சிரமமாக இல்லையா?அது கொஞ்சம் கஷ்டம் தான். ஒரு கேரக்டர் முடித்து அடுத்த கேரக்டரை உடனே பண்ணிவிட முடியாது. குறிப்பா கிளைமாக்ஸ் கேரக்டர் பண்ண கிட்டத்தட்ட ஒரு வருடம் 'டயட்'ல இருந்தேன். அந்த மாதிரி டயட் ஓரிரு மாதம் தான் இருக்க முடியும். அந்த கதாபாத்திரத்திற்கு முன் 'டயட்' பெரிதாய் தெரியவில்லை.இதனால் பிற படவாய்ப்புகளை இழந்துவிட்டோம் என வருந்தியது உண்டா?வரிசையாக நான்கைந்து படங்களில் சாதாரணமாக நடித்துவிட்டு ரொம்ப சந்தோஷமாகத் தான் இருந்திருப்பேன். ஆனால் இந்த ஒரு படம் பத்து படத்திற்கு சமம் என்று நினைக்கிறேன்.ஷங்கர் பற்றி ... ? அவர் படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்வார். ஹாலிவுட்டை எட்ட கொஞ்சம் டிரை பண்ணியிருக்கிறார். அடுத்து என்ன செய்யலாம் என புது முயற்சிகள் எடுப்பார். அவரால் மட்டுமே அது முடியும். அவர் கையில் இப்படி ஒரு கதை கிடைத்த பிறகு வேறு எந்த நடிகனாக இருந்தாலும் கண்டிப்பாக எத்தனை ஆண்டு ஆனாலும் வேறு படமே வேணாம்னு தான் தோணும்.ஐ படம் உங்களுக்குள் உணர்த்தியது என்ன? இந்தப்படம் முடிச்சதுமே 'இது போதும்பா... அப்படியே 'ரிட்டர்யர்டு' ஆகிடலாம்.. ஏதாவது தோட்டம் வாங்கி போட்டு அப்படியே ரிலாக்ஸ் ஆகிடுவோமா?...' என நண்பர்களிடம் சில நேரம் சொன்னதுண்டு. மறுபக்கம் இன்னும் நிறைய புது ரோல்கள் பண்ணனும்னு மனதில் ஓடிக்கொண்டிருந்தது.இனி வரும் படங்கள் எப்படி இருக்கும்?இன்னும் பல இயக்குனர்கள் படத்தில் நடிக்கணும். அவை வியக்கத்தக்க கதாபாத்திரங்களாக இருக்க வேண்டும். ஷங்கர் அந்நியன் கொடுத்தது போல, பாலா சேது, பிதாமகன் கொடுத்தது போல, மணிரத்னம் ராவணன் கொடுத்தது போல, விஜய் தெய்வத்திருமகள் கொடுத்தது போல சவாலான படங்கள் பண்ணனும். ஒவ்வொரு படமும் எனக்கும், ரசிகர்களுக்கும் புதுசா இருக்கணும்.ஐ படத்தில் வினோத தோற்றம் உருவானது எப்படி?மூன்றாவது கதாபாத்திரத்திற்கு ரொம்பவே சிரமப்பட்டேன். அந்த கேரக்டருக்கு செயற்கையா மேக்கப் போட குறைந்தது 5 மணி நேரம் ஆகும். நான்கு பேர் உதவினால் ௨ மணி நேரத்திலாவது முடித்துவிடலாம். அந்த மேக்அப் போட்டதுமே பல்வேறு உபாதை ஏற்படும். போனை கேரவனில் வைத்துவிட்டு யாரிடமும் பேசாமல் தனியாக அமர்ந்துவிடுவேன். அந்த ரோல் என் குணத்தையே மாத்திடுச்சு. ஐ படம் எனக்குள் பெருமையான பயணமாக இருந்தது. நான் பட்ட சிரமங்களை திரையில் காண, மூன்று ஆண்டுகளாக ஆர்வமாய் இருக்கிறேன். நீங்களும் பாருங்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்