உள்ளூர் செய்திகள்

நெய்யும் வெல்லமும், மலை இஞ்சி பொரியலும் - பயணங்களால் சமையல் கற்ற வர்ஷா பஞ்சாபி

ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்துவமான உணவு வகை உண்டு. இதை அந்தந்த நாட்டிற்கு சென்று தான் உண்ண முடியும் என்ற நிலை இப்போது கிடையாது. நம்மூர் நட்சத்திர ஓட்டல்களிலேயே அவ்வகை உணவெல்லாம் கிடைக்கும். வெளிநாடுகளின் பிரபலமான உணவு ரெசிபியை கேட்டு தெரிந்து கொண்டு, அதன் நுணுக்கங்கள் மாறாமல் தன்னுடைய ஸ்டைலில் சமைத்து, சமையல் வல்லுனர்களையே வாய் அடைக்க வைப்பவர் 'டிராவலிங் செப்' வர்ஷா பஞ்சாபி. அவர் கூறியது: பிறந்து வளர்ந்து எல்லாமே சென்னை. பூர்வீகம் பஞ்சாப்.தீபாவளி பண்டிகைக்கு வட இந்திய பலகாரங்கள், தமிழகத்தின் பலகார வகைகள் என அனைத்தையும் வெளியே விலை கொடுத்து வாங்காமல் தனியாகவே அம்மா செய்து விடுவார். அதைபார்த்து எனக்கும் சமையல் கலை மீது ஆர்வம் அதிகரித்தது. எந்த ஓட்டலுக்கு சென்றாலும் அங்கு ஸ்பெஷலான உணவை ருசிப்பேன். அதன் பின் கூச்சப்படாமல் 'ரெசிபியை' கேட்டு தெரிந்து கொண்டு வீட்டிற்கு வந்து செய்து பார்ப்பேன். 10 மொழிகள் நன்றாக பேசத் தெரியும். இதனால் பிற மொழி நண்பர்கள் அதிகம். அதன் மூலம் பல ஊர்களில் மாடலிங் செய்து வருகிறேன்.பொள்ளாச்சியில் மாடலிங் ஷூட்டிங்கில் இருந்த போது அங்கிருந்த பண்ணை வீட்டில் இருந்து நல்ல உணவு வாசனை வந்தது. அதில் சோறுடன் வேக வைத்த பருப்பு, உப்பு கலந்து உணவு தயாரித்தனர். அதில் நெய்யில் வெல்லம் சேர்த்து கலந்தனர். குளிர்காலத்தில் வெல்லம் உடம்பிற்கு தேவையான சூட்டை கொடுக்கும் என்பதால் நெய்யில் கலந்து உபயோகிப்பதாக தெரிவித்தனர். அன்று முதல் இன்று வரை வீட்டில் நெய் செய்தாலோ, வெளியே வாங்கினாலோ குளிர்காலத்தின் போது சிறிதளவு வெல்லம் சேர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன்.ஏலகிரி, கொடைக்கானலுக்கு ஷூட்டிங் செல்லும் போது தோட்டத்தில் பணிபுரிபவர்கள் மலை இஞ்சியில் பொரியல் செய்வதை கண்டேன். ஒவ்வொரு இடத்திலும் நிலவும் காலநிலைக்கு ஏற்றாற் போல அங்கு கிடைக்கும் காய்கறியை வைத்து உணவு சமைக்கின்றனர். இதனை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன். பல இடங்களுக்கு பயணம் செய்துகொண்டே, அந்த ஊர் சமையலையும் கற்றுக்கொண்டு அதனை இணையத்தில் பதிவேற்றுகிறேன்.எனது கணவர் குடும்பம் ஆந்திராவை பூர்வீகமாக உடையது என்பதால், அவருடைய பாட்டி மூலம் ஆந்திர உணவு வகைகளை கற்றேன். கணவருக்காக கொரோனா காலகட்டத்தில் பிரியாணி செய்ய கற்றுக் கொண்டு 19 வகையான பிரியாணிகள் செய்தேன். சைனீஸ், தாய், இத்தாலியன், கான்டினேன்டல், கொரியன், ஜப்பானீஸ், சிந்தி, ஜமைக்கன், ஆந்திரா, கேரளா, பஞ்சாபி, காஷ்மீரி, லக்னோவி, டக்னீ, குஜராத்தி உட்பட 25 வகையான உணவுகள் சமைக்க கற்றுக்கொண்டேன்.ஒவ்வொரு பிரசித்தி பெற்ற நட்சத்திர ஓட்டல்களுக்கும் சென்று அங்குள்ள சமையல் வல்லுனரின் சுவையான உணவின் ரெசிபியை தெரிந்து கொண்டு என்னுடைய ஸ்டைலில் சமைத்து கொடுத்து, அந்த உணவு எப்படி இருக்கிறது என அந்தந்த வல்லுனர்களே விமர்சனம் கூறுவார்கள். அப்படி உருவானது தான் இந்த 'டிராவலிங் செப்' இன்ஸ்டாகிராம். பெரிய ஓட்டல்களில் 12 முதல் 15 உயர் அழுத்த அடுப்புகள் இருக்கும். அந்த வெப்பத்தில் நமக்காக சுவை மிகுந்த உணவு தயாரிக்கும் சமையல் கலைஞர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம். சமையல் எங்கு, எப்படி நடக்கிறது என தெரிவிக்க உணவகங்களின் கிச்சன் பகுதியை கேமராவில் பதிவு செய்து காட்டுகிறோம். சமையல் கலைஞர்களிடம் நேரடியாக சென்று உரையாடும் போது உணவின் வரலாறு, சிறு நுணுக்கங்களை தெரிந்து கொள்ள முடியும்.தற்போது பெரும்பாலும் திருமண நிகழ்ச்சிகளில் விருந்தினர்களுக்கு இலையில் வைத்து பரிமாறப்படும் உணவு, ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாததாகவே உள்ளது. இதை சரி செய்ய தனி மெனு தயார் செய்து வருகிறேன். விரைவில் அதனை அறிமுகப்படுத்துவேன் என்றார்.insta: The Travelling Chef- எஸ். முப்பிடாதி கங்கா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்