உள்ளூர் செய்திகள்

காதல்... நனைவதற்கு ஒரு நதி ஞாபகத்தில் வேறு நதி

'என்னிடம் தான்வந்துகொண்டிருக்கிறாய்என்னைத் தாண்டிசென்ற பின்னரும்!'என்ற காதல்+ தன்னம்பிக்கை கவிதைக்கு சொந்தக்காரர். கவிதை, கட்டுரை, கதை என முத்தளத்திலும் முத்தமிழில் முத்திரை பதிக்கும் இளையதலைமுறை எழுத்தாளர் ஆத்மார்த்தி. இசையோடு இசைந்து இசைந்து இவர் எழுதிய நுாறு கட்டுரைகள் 'புலன் மயக்கம்' என்னும் நுாலாக வந்த போது, அந்த எழுத்து வாசகன் புலனை மகுடி இசை போல் மயக்கியது. பின்னர் இசை சாம்ராஜ்யத்தின் சமீபங்களில் இருந்து விடுபட்டாலும் எங்கோ ஏழு ஸ்வரங்களாய் ஒலித்துக்கொண்டிருக்கும் 'இசைமனிதர்களை' பற்றி இவர் எழுதிய 'வனமெல்லாம் செண்பகப்பூ' திரை இசை ரசிகனுக்கு வசந்த வாசல் திறந்தது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான இவரது 'அரங்கு நிறைந்தது; நீங்கள் அவசியம் பார்த்தாக வேண்டிய தமிழ்ப்படங்கள் 100' என்ற நுாலை படிக்கும் எந்த ரசிகனும் தான் பார்த்து விட்ட திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்து விடுவான்; இதுவரை பார்த்திராவிட்டால் பார்க்க துாண்டும் எழுத்து இவருடையது. வார்த்தைகளால் வசியம் செய்யும் 'வசியப் பறவை' ஆத்மார்த்தியோடு ஒரு அந்திமாலை பொழுதில்...எழுத்து எந்த வயதில் வசமானது?மதுரைக்காரனான நான் எனது ஏழு வயதில் நுாலை படிக்க துவங்கினேன். அப்பா நடத்துனராக இருந்தவர். எங்கு சென்றாலும் நாளிதழ்கள், வார இதழ்கள், நுால்கள் வாங்கி வருவார்.எங்கள் வீட்டில் எப்போதும் இருக்கும் பண்டம் பத்திரிகை. அப்போது இருந்து புத்தகங்களை சேகரித்து வருகிறேன். பள்ளி படிப்பில் சுமார். ஆனால் புத்தக படிப்பில் கெட்டிக்காரன். கல்லுாரிக்கு செல்லும் முன்பே எனக்கு இலக்கியம் வசமானது. கோணங்கியையும், சுஜாதாவையும் அப்போதே படித்து விட்டேன். தீய பழக்கத்திற்கு அடிமையாவது போன்றது தான் நுால் படித்தலும். ஒரு முறை படிக்க பழகினால் மீண்டும் மீண்டும் படிக்க துாண்டும். தீய பழக்கத்திற்கு நிறைய விலை தர வேண்டும். ஆனால் நுால் படித்தால் நமக்கு விலை தரும். பி.காம்.,படித்து விட்டு வணிக நிறுவனம் நடத்தினேன். சிலகாலம் திரைத்துறையில் உதவி இயக்குனராக சென்றேன். அங்கு தான் நான் 'எழுத்துக்காரன்' என்பதை அறிந்து கொண்டேன். அன்றில் இருந்து முழுவதுமாக எழுத்துக்கு வந்து விட்டேன். 2011 ல் முதல் கவிதை நுால் வெளியானது.எனக்கு 100 பிதாமகன்கள்; 100 வாசல்கள். முதன் முதலாக ஒரு இணைய தளத்தில் எழுத ஆரம்பித்து தொடர்ந்து வார இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் எழுத ஆரம்பித்தேன். இதுவரை 30 புத்தகங்கள் எழுதியுள்ளேன்.ரவிசங்கர் எப்படி ஆத்மார்த்தி ஆனார்?ஆத்மார்த்தம் என்ற சொல் பிடிக்கும். ஆத்மார்த்தி அதன் பெண் பெயர். ஆனந்தம் என்ற சொல்லில் இருந்து ஆனந்த், ஆனந்தி போல ஆத்மார்த்தி. எனக்கு பிடித்த எழுத்தாளர் சுஜாதா, பெண் பெயரில் எழுதுவது போல ஆத்மார்த்தி என புனைப் பெயரில் என் முதல் கவிதை படைப்பை எழுதினேன்.திரை இசை, திரைப்படங்கள் பற்றி நிறைய நுால்கள் எழுதியிருக்கிறீர்கள். அந்த பக்கம் திரும்பியது எப்படி?திரைப்படம் பற்றிய நுால்கள் போதாது. திரைப்படம் எப்படி மாறி இருக்கிறது என்பதை விட திரைப்படத்தால் சமூகம் எப்படி மாறி இருக்கிறது என்பது கவனிக்கதக்கது. நம் அன்றாட வாழ்க்கையில் வடிவேலுக்கு இடம் இல்லாமல் இருக்கலாம். அவர் பேசும் வசனங்களுக்கு இடம் உண்டு. ஆய்வு கட்டுரைகள் போல சினிமாவை அறிமுகப்படுத்துவது பல்கலைக்கு சரி. நான் பாமர ரசிகன். பாமரன் என்பது குறைபாடு அல்ல. அது ஒரு வகைமை. படத்தை ஓட வைப்பது பாமரன். பேசுவது பண்டிதனிடமா. எனவே நான் தாமஸ் ஆல்வா எடிசனாக அல்ல ஒரு தரை ரசிகனாக நீங்கள் அவசியம் பார்த்தாக வேண்டிய 100 தமிழ் படங்கள் பற்றி 'அரங்கு நிறைந்தது' என்ற நுாலில் எழுதியுள்ளேன். நான் ரசித்த விஷயங்கள் என்றால் அது என் டைரி ஆகிவிடும். அப்படி அல்லாமல் உங்களுக்கு தேவையானதை மட்டும் தரும் மருந்து கடை போல அந்த நுால் 100 திரைப்படங்களை பற்றி பேசும். பேசும் படம் ஆரம்பித்த 1940களில் இருந்து 2020 வரை 80 ஆண்டுகளில் வெளியான படங்களை தேர்வு செய்துள்ளேன். ஹரிதாசில் ஆரம்பித்து பரியேறும் பெருமாள் வரை. 100 திரைப்படங்கள் பற்றி எழுத 1000 திரைப்படம் பார்த்தேன். தமிழுக்கு இது புதுமுயற்சி.ஏற்கனவே இந்த படங்களை ரசிகர்கள் பார்த்திருப்பார்களே; அவர்களுக்கு தானே மீண்டும் தந்துள்ளீர்கள்...நிலவுக்கு யாரும் போகவில்லை என்பதற்காக நிலவு பற்றி பயணகட்டுரை எழுத முடியாது. இது திரைப்படங்கள் பற்றிய விமர்சனம் அல்ல. இயக்குனருக்காக, நடிகருக்காக படங்களை புத்தகத்தில் தேர்வு செய்யவில்லை. காலத்திற்காக சில படங்களை தேர்வு செய்துள்ளேன். ஒரு படத்தை பற்றி எழுதியது போல் இன்னொரு படத்தை எழுதவில்லை. ஓழுங்கின்மை தான் இந்த நுாலின் ஒழுங்கு.ரசிகர்களின் பக்கம் நின்று கொண்டு, இசைக்கலைஞர்களை, திரையிசையை பற்றிய எழுதிய 'புலன் மயக்கம்' கட்டுரைகளின் நான்கு பாகத்தையும் தொகுத்து அண்மையில் வெளியிட்டேன்.கண்ணதாசனின் 60 திரைப்பாடல்கள் பற்றி 'துாவான துாறல்', பாபநாசம் சிவன் போன்ற 23 இசைக்கலைஞர்கள் பற்றிய 'வனமெல்லாம் செண்பகப்பூ' போன்றவை கவனம் ஈர்த்தன.கண்ணதாசன் பாடல்களை எழுதிய நீங்கள் இளையராஜாவை இசைப்பது எப்போது?இளையராஜாவின் இசைஉலகுப்பற்றி முழுமையான புத்தகம் இல்லை. 'இளையராஜாவின் இசை- அகமும் புறமும்'- அப்படி ஒரு புத்தகம் எழுத ஆசை. இந்தியாவில் முதன்முறையாக சப்தங்களை இசைக்குள் கொண்டு வந்தவர். அதுப்பற்றி நிறைய விபரங்களை தொகுத்து வருகிறேன்.'காதல்...நனைவதற்கு ஒரு நதிஞாபகத்தில் வேறு நதி' என்ற கவிதையால் பெரிதும் பேசப்பட்டவர் நீங்கள். இப்படி எழுதியுள்ளீர்களே... இது இரண்டு காதலா?ஒருவரை காதலித்து இன்னொருவரை திருமணம் செய்வது என்பது அதன் அர்த்தம் அல்ல. சொல்லுக்கும் செயலுக்கும் ஆன வித்தியாசம் தான் வாழ்க்கை. இரட்டை என்பது இந்த உலகத்தின் நியதி. உங்கள் பிறப்பிற்கு முன் ஒரு உலகம்; உங்களுக்கு பிறகு ஒரு உலகம். ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து விட்டீர்கள். காதலியாக அவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்கும், மனைவியாக கொண்டாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. என் காதலியாக அவள் ஒருத்தி; அவரே மனைவியாக இன்னொருத்தி.ஒரு முழுநேர எழுத்தாளர் நீங்கள். அதற்கான வருமானம் வருகிறதா?முழுநேர எழுத்தாளராக இருந்தால் வருமானம் குறைவு தான். என் மனைவி அரசு மருத்துவக் கல்லுாரி இணை பேராசிரியை; அதனால் வீட்டில் நான் ஹோம் மேக்கர். என் வீட்டார் தான் எனக்கு உதவி. எனவே நாள் முழுக்க எழுத முடிகிறது. பொருளின் வழியாக எழுத்தை தேடக்கூடாது. எழுத்தின் வழியாக பொருள் தேடுவது கடினம்.ஆத்மார்த்தியோடு அளவளாவ 95247 27000


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்