திக்கெட்டும் அன்பு பொங்கட்டும்! தித்திப்பாய் மகிழ்ச்சி பரவட்டும்!
உலக இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டே நடக்கிறது. மனிதர் மட்டுமின்றி பெரும்பாலான உயிர்களும் அதிகாலையிலேயே கண் விழிக்கின்றன. தாவரங்கள் சூரியஒளியின் துணையுடன் ஒளிச்சேர்க்கை நடத்துகின்றன. பறவைகள் இரை தேடச் செல்கின்றன. மனிதர்கள் தங்களின் கடமைகளில் ஈடுபடுகின்றனர். இப்படி ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களுக்கும் வாழ்வின் ஆதாரமாக சூரியன் உள்ளது. அதனால், வாரத்தின் முதல் நாளை சூரியனுக்குரியதாக ஏற்படுத்தி வைத்தனர். தமிழ் காப்பியங்களில் முதல் நுாலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்து “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்றே தொடங்குகிறது. மற்ற நிலா, மழை போன்ற இயற்கை தெய்வங்கள் கூட சூரியனுக்கு பின்னரே குறிக்கப்படுகின்றன.சூரியனுக்கு ஆயிரம் முகங்கள்ககோளம் என்ற பிரம்மாண்டமான அண்டம் வான மண்டலத்தில் இருக்கிறது என்கிறது சூரிய புராணம். இந்த அண்டத்தில் இருந்து தோன்றியவர் சூரியன். ககோல்கத்தில் இருந்து பிறந்ததால் சூரியனுக்கு 'ககோல்கர்' என்றும் பெயருண்டு. 'அதி பயங்கர பிரகாசம் கொண்டவர்' என்பது இதன் பொருள். அது மட்டுமல்ல! சூரியனுக்கு ஆயிரம் முகங்கள், ஆயிரம் கைகள், ஆயிரம் கால்கள், முகத்திற்கு ஒரு கண் வீதம் ஆயிரம் கண்களும் உண்டு.திருமண யோகம் கைகூட...சீதைக்கும் ராமனுக்கும் திருக்கல்யாணம் நடத்த ஏற்ற மாதம் தை. ராமன் பரமாத்மா (கடவுள்), சீதை பிரகிருதி (உலக ஜீவன்). சீதாதேவி ராமனை விட்டு ராட்சஷ சக்தியால் பிரிந்தாள். பின்னர் பதிபக்தியால் மீண்டும் கணவரை அடைந்தாள். அதுபோல உயிர்களும் கடவுளை மறந்து ராட்சஷ குணத்துடன் இருக்கின்றனர். அதைக் கைவிட்டு கடவுள் ஒருவரே உண்மை என்பதை உண வேண்டும். இதற்காகவே கோயில்களில் சீதாராம கல்யாணம் நடத்தப்படுகிறது. தை மாதம் ஒரு சுபநாளைத் தேர்ந்தெடுத்து வேதியர்களைக் கொண்டு சீதா கல்யாணம் நடத்தினால் தடை நீங்கி திருமணயோகம் கைகூடும்.நல்வாழ்வு தருபவர்சூரியனை வழிபட்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆயுள் பெருகும் என்பது விதி. இது தவிர, தேவையற்ற இடத்திற்கு பணி காரணமாகவோ, பிற காரணங்களாலோ மாறி விடுவோமோ என்ற பயம் கொண்டவர்கள், நீண்டகால நோய் உள்ளவர்கள், வீண்விரயத்தால் வருந்துபவர்கள், பார்வை குறைபாடு உள்ளவர்கள், பொய் வழக்கில் சிக்கியவர்கள், பலனின்றி வெளியூர் பயணம் செய்பவர்கள், கடனால் அவதிப்படுபவர்கள் ஆகியோர் நவக்கிரக நாயகனான சூரியனுக்கு செந்தாமரை மலர் சாத்தி வணங்கினால் பிரச்னை தீர்ந்து நல்வாழ்வு ஏற்படும்.ஐஸ்வர்யம் பெருக...தைமாத வளர்பிறை சப்தமியை ரதசப்தமியாக (பிப்.1) கொண்டாடுவர். இந்நாளில் சூரியனின் ரதம் மேற்கு நோக்கி நகர்வதாக ஐதீகம். அன்று காலை சுமங்கலிகள் குளிக்கும் போது ஏழு எருக்க இலைகளையும், சிறிது அட்சதையையும் வைத்துக் கொண்டு நீராடுவர். ஆண்கள் நீராடும் போது ஏழு எருக்க இலைகளையும், அரிசியையும் வைத்து நீராட வேண்டும். பூஜையறையில் தேர்க்கோலமிட்டு சர்க்கரைப்பொங்கல், வடை நெய்வேத்தியம் செய்து சூரியனை வழிபடவேண்டும். இதனால் ஆரோக்கியம் நிலைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்.பொங்கல் நன்னாளில் சூரியன் அருளால் எங்கும் அன்பு பொங்கட்டும்! மகிழ்ச்சி பரவட்டும்!!பெரியவர் சொல்றதை கேளுங்க!பரிவார தெய்வமாக கருதி சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் சொல்வது, சூரிய நமஸ்காரம் செய்வது தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் பழங்காலத்தில் சூரியனே முழுமுதற்கடவுளாக கருதப்பட்ட சவுர மதம் இருந்தது. ஒடிசாவிலுள்ள ' கோனார்க்' என்னும் இடத்தில் சூரியனுக்கு கோயிலும் இருந்தது. 'கோண அர்க்கம்' என்பதே 'கோனார்க்' எனப்பட்டது. 'சூரியனின் பகுதி' என்பது பொருள். வெளிநாட்டவரும் வியக்கும் கலை நயம் மிக்க கோயில் இது.அர்க்கன் என்பதற்கு 'சூரியன்' என்பது பொருள். எருக்கம்பூவினை 'அர்க்க புஷ்பம்' என்பர். அர்க்க என்பதே தமிழில் 'எருக்கு' என்றானது. சூரியனார் கோவிலின் தலவிருட்சமாக எருக்கு உள்ளது. எருக்கம்பூவால் விநாயகரை அர்ச்சிப்பபோருக்கு சூரியனை வழிபட்ட பலன் சேரும். காஞ்சிப்பெரியவரின் தெய்வத்தின் குரல் நுாலில் இத்தகவல் உள்ளது.நரகம் டூ சொர்க்கம் போவோமா!காலமாகி விட்ட நம் முன்னோர் பற்றி நம் மனசாட்சிக்கே நன்றாகத் தெரியும். “என் தாய் அவளது மருமகளைக் கொடுமைப்படுத்தினாள். என் தந்தை தினமும் குடித்து விட்டு வந்து என் தாயை உதைத்தார். என் உறவுக்காரர் அரசுப்பணியில் இருந்த போது லஞ்சம் வாங்கினார். இன்னொருவர், ஒரு ஏழைப்பெண்ணின் திருமண நகைகளைத் திருடியதால், அவளது திருமணமே நின்று போனது. என் சகோதரர் ஒரு பெண்ணை ஏமாற்றி இன்னொருத்தியை திருமணம் செய்து கொண்டார்”. இத்தகைய கொடிய பாவங்கள் செய்தவர்களெல்லாம், காலமான பின் நரகத்தில் உழன்று கொண்டிருப்பர். இவர்களை சொர்க்கம் அனுப்ப, பூமியில் உள்ள அவரது பிள்ளைகள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் பற்றி சூரிய பகவான் சொல்லியிருக்கிறார். சித்திரை மாதம் வளர்பிறை அல்லது தேய்பிறை சதுர்த்தசி திதியன்று ஏழைகளுக்கு விளக்கு வாங்கி கொடுக்க வேண்டும். வசதி இல்லாதவர்கள் மண் தீபம் வாங்கிக் கொடுத்தால் போதும். இவ்வாறு செய்தால் நரகத்தில் அவஸ்தைப்படும் முன்னோர் சொர்க்கம் செல்வார்கள் என்கிறார். சூரிய புராணத்தில் இத்தகவல் உள்ளது.- பாமு