பாலும் மஞ்சளும், பளிங்கு முகமும்....
'சன் பாத், ஆயில் பாத், பேஷியல்...' என்று பெண்கள் நுனிநாக்கு அலட்டலில் சொல்லும் பார்லர் விஷயங்கள்... முகத்தில் ரசாயனம் பூசி முதுமையை வாவென்று அழைக்கும் முகமறியா எதிரிகள். களையான மஞ்சள் முகமும், அலையான கருங்கூந்தலும் பெண்களை முடிசூடா அழகிகளாக்கி கொண்டிருக்கிறது என்கிறார் மதுரையைச் சேர்ந்த சித்தா மருத்துவர் மைதிலி. விஞ்ஞானம் என்றறியாமல் கிராமத்துப் பெண்கள் அழகுக்காக செய்த விஷயங்கள் இன்றளவும் அழகுலகத்தை பிரமிக்கச் செய்கிறது. ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோமே...களிமண் பேசியல்: ஆற்றுப்பகுதி, குளத்தங்கரையில் குளிக்கும் போது மென்மையான வண்டல் மண்ணை உடலில், முகத்தில் தேய்த்து பூசிக் கொள்வர். இதைத் தான் மேலைநாடுகளில் மண்குளியல் என்கின்றனர். வயல்வேலை செய்யும் பெண்கள் உடலில் வெப்பம் தாக்காமல் இருக்க சேற்று மண்ணை பூசிக் கொள்வதுண்டு. களிமண்ணை பூசினால் தோல்நோய் வராது.இலையும், 'ஹேர் டை'யும்: கரிசலாங்கன்னி, அடர்சிவப்புநிற ஒற்றை செம்பருத்தி இலை, மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது. பொடுகுத் தொல்லை இருக்காது. தலைமுடி நன்கு வளரும். நரைமுடியை தடுக்கும். கிராமங்களில் இதைத் தான் 'ஹேர் டை'யாக பயன்படுத்தி வந்தனர். கறிவேப்பிலை, மருதாணி, நெல்லி, கரிசலாங்கன்னி, சிவப்பு பொன்னாங்கன்னி, முளைகட்டிய வெந்தயத்தை காயவைத்து அரைத்து எண்ணெயில் இடவேண்டும். இதை தேய்த்து வந்தால் நீளமான கூந்தல் கிடைக்கும்.இயற்கை 'பாடி ஸ்ப்ரே: வெந்நீரில் எலுமிச்சை அல்லது சாத்துக்குடி, ஆரஞ்சுப் பழத் தோலை போட்டு குளித்தால் உடலுக்கு புத்துணர்வும், நல்ல மணமும் கிடைக்கும்.பாதமும் பரவசம் தரும்: வாரத்திற்கு இரண்டு முறை முகத்தில் தேன் தடவி வந்தால் முகக்கருமை மறையும். உதடு வெடிப்பு, கை, கால் வெடிப்பும் வராது. இதோடு வாரம் இரண்டு முறை எலுமிச்சை சாறுடன் கருப்பட்டி, வெல்லம் அல்லது தேன் கலந்து குடித்தால் பித்தவெடிப்பு ஏற்படாது. பாதத்தில் முகம் பார்க்கும் அளவு பரவசம் தரும்.வேப்பிலை 'ஸ்டீம் பாத்': கொதிக்கும் நீரில் வேப்பிலை சேர்த்து முகத்திற்கு ஆவி பிடித்தால் நுண்ணிய துவாரங்களில் உள்ள அழுக்கு வெளியேறும். கிழங்கு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, கடலைபருப்பு, ரோஜா இதழ் சேர்த்து அரைத்த கலவையை பூசினால் இயற்கை பேஷியல் தயார்.பளிங்கு முகமே: கடலை பருப்பு, பாசிப்பயறுடன் பன்னீர் சேர்த்து அரைத்து முகத்தில் பூசினால் தளர்ந்த முகம் இறுகும். முகத்தில் பருக்கள் வந்தால் திருநீற்று பச்சிலையை அரைத்து பூசினால் காணாமல் போய்விடும். ஜாதிக்காயை உரசி முகத்தில் தடவினால் பருத்தொல்லை நீங்கும். முகமும் நிறம் கூடி பளபளப்பாகும்.இழந்த நிறத்தை மீட்பதற்கு கார்போக அரிசி, பச்சரிசியை பசும்பாலில் ஊறவைத்து விழுதாக அரைத்து முகத்தில் தேய்த்து வந்தால் நல்ல நிறம் கிடைக்கும். காய்ச்சாத பசும்பாலை முகத்தில் பூசி காய்ந்தபின் கழுவினால் பாலை விட மென்மையாய் முகம் மாறும்.drkvmythili@yahoo.com