ஆயிரம் முகம் கொண்ட கடவுள்
சூரியபகவானே முழுமுதற்கடவுள் என்று சூரியபுராணம் குறிப்பிடுகிறது. இவரது இருப்பிடம் சூரியலோகம் எனப்படுகிறது. சிவனுக்கு கைலாயம், நாராயணனுக்கு வைகுண்டம், பிரம்மாவுக்கு சத்தியலோகம் ஆகியவை போல, சூரியனுக்குரியது சூரியலோகமாகும். இது மகிமை மிக்க உலகமாக உள்ளது.
தேவர்கள், கந்தர்வர், கின்னரர், கிம்புருடர் ஆகியோர் சூரியனை வணங்கிய பின்னரே தங்களைப் பணிகளைத் தொடங்குகின்றனர். கந்தர்வர்களின் கானமழையில் அப்சரஸ் என்னும் தேவமாதர் சூரியலோகத்தில் நடனமாடுவர். நான்குவேதங்களையும் ரிஷிகள் ஓதி சூரியனைப் போற்றுவர். பிங்களன், தண்டநாயகன் என்ற துவார பாலகர்கள் சூரியலோகத்தைக் காவல் செகின்றனர்.
அருணன் சூரியனின் சாரதியாக இருக்கிறார். ஏழுகுதிரைகள் பூட்டப்பட்ட அத்தேருக்கு ஒற்றைச் சக்கரம் தான் இருக்கிறது. சூரியனின் மனைவியராக உஷா, பிரத்யுஷா உள்ளனர். அவர் ஆயிரம் முகங்கள்(கிரணங்கள்) கொண்டவராக கிழக்குத்திசையில் உதிக்கிறார். இக்கிரணங்களால் நாலாபுறமும் ஒளியைப் பரவச் செகிறார். வசந்தகாலத்தில் தங்கநிறமாகவும், வெயில் காலத்தில் செண்பகப்பூ நிறமாகவும்,கார்காலத்தில் கருஞ்சிவப்பாகவும், மழைக்காலத்தில் வெண்ணிறமாகவும், முன்பனியில் செம்பு நிறத்துடனும், பின்பனிக்காலத்தில் சிவப்பு நிறத்துடனும் காட்சி தருகிறார்.