தஞ்சை தரணியில் பொங்கல் சுற்றுலா
பொங்கல் விடுமுறையில் ஒரு நாள் சுற்றுலா செல்ல வேண்டும். அதுவும் பொங்கல் சார்ந்த, தமிழரின் பண்பாடு போற்றும் இடங்களை பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சந்தேகமே இல்லாமல் தஞ்சை தரணிக்கு செல்லலாம்.தஞ்சாவூர் என்றாலே நெஞ்சில் நிற்பது பிரகதீஸ்வரர் கோயில் தான். முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட வரலாற்று பெருமை கொண்டது. அண்மையில் அமெரிக்க இதழ் ஒன்று வெளியிட்ட, தமிழகத்தில் அவசியம் பார்க்க வேண்டிய இரண்டு இடங்களில் இந்த தலம் ஒன்று. மற்றொன்று மதுரை மீனாட்சி கோயில்.தஞ்சை பெரிய கோயில் இந்தியாவின் மிகப்பெரிய கோயில்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னம் இது. கோயில் சிற்பங்களும், கட்டடக்கலையும் தமிழர் பண்பாட்டையும், நாகரிகத்தையும் என்றும் போற்றும் விதத்தில் அமைந்துள்ளன. கோயில் உள் சுவரில் வரையப்பட்டுள்ள சோழர் காலத்து ஓவியங்கள், அச்சு அசலாய் அஜந்தா ஓவியங்களோடு ஒப்பிடத்தகுந்தவை. பதிமூன்று அடி உயரம், 54 அடி சுற்றளவில் லிங்கம் வடிவில் காட்சிதரும் இறைவனை தரிசித்து விட்டு, மிக விசாலமான கோயில் வளாகத்தில் அமர்ந்து இளைப்பாறுவது ஆனந்தம் தரும். கோயில் காலை 5:30- மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:00- 8:00 மணி வரையும் திறந்திருக்கும்.ஒரே கல்லில் செதுக்கப்பட்டு 16 அடி நீளம், 13 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் நந்தியை மாட்டு பொங்கல் அன்று வணங்குவது சிறப்பு. பொங்கலை முன்னிட்டு இங்கு நடக்கும் மகரசங்கராந்திப் பெருவிழா விசேஷமானது. இன்று (ஜன.15) மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நாளை காலையில் நந்திக்கு பழங்கள், காய்கறிகள், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. தொடர்ந்து நடக்கும் கோ பூஜையில் தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வர்.இங்குள்ள வாராஹி சிலை சிறப்பு மிக்கது. சோழர்கள் தங்கள் போர் வெற்றிக்காக வாராஹியை வழிபட்டுள்ளனர்.தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மியூசியம், சரஸ்வதி மகால் போன்றவற்றையும் பார்க்கலாம்.இங்கு இருந்து 8 கி.மீ., தொலைவில், திட்டை என்ற இடத்தில் உள்ள குரு பரிகார கோயில் பிரசித்தி பெற்றது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் உள்ளது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியத்திற்காகவும், கன்னிப்பெண்கள் திருமண வரத்திற்காகவும் அம்பாளை வேண்டுகின்றனர்.தஞ்சாவூர் நகரத்திற்கு வெளியே கண்ணுக்கு எட்டிய தூரம் எல்லாம், பச்சை பசேலென பரந்து பரவி கிடக்கும் வயல்பரப்பை பார்த்தவாறு பயணிப்பது பரவச அனுபவம். தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மண்ணில் இன்னும் உழவும், உழவனும் வாழ்வதால் தானே நாமும் அரிசி உண்டு வாழ்கிறோம். இந்த நன்னாளில் அவர்களை நினைவு கொள்வோம்.இரண்டு நாள் சுற்றுலாவாக செல்ல விரும்பினால், தஞ்சையில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் கும்பகோணம் செல்லலாம். அல்லது மூன்று மணி நேர பஸ் பயணத்தில் மயிலாடுதுறை செல்லலாம். இந்த இரு நகரங்களை சுற்றிலும் அற்புதமான கோயில்கள், ராகு-கேது, குரு, சனி பரிகார தலங்கள் ஏராளம். கோயிலும், குளமுமாக ஆன்மிக சுற்றுலாவுக்கான ஊர்கள் இவை. 'தஞ்சாவூரில் தடுக்கி விழுந்தால் கோயில்' என்பது முதுமொழி.எப்படி செல்லலாம் காலையில் மதுரையில் இருந்து வைகை ரயிலில் திருச்சி சென்றால், அங்கிருந்து 9:35 க்கு கிளம்பும் சென்னை ரயிலில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறைக்கு செல்லலாம். மதுரையில் இருந்து தஞ்சைக்கு ஏராளமான பஸ்கள் செல்கின்றன.ஜிவிஆர்