உள்ளூர் செய்திகள்

பொங்கல் வாழ்த்து அட்டை ஞாபகம் இருக்கா?

ஒரு காலத்தில் நம்மோடு உறவாடி, குஷிப்படுத்தி, பாடாய்படுத்தி, நட்புகளை நாடி பிரமிக்க வைத்து, கொஞ்ச வைத்து, கெஞ்ச வைத்து, ஏங்க வைத்து, சிரிக்க வைத்து அழ வைத்து ... -இப்படி, எத்தனை உணர்ச்சிகள் உண்டோ, அத்தனை அனுபவங்களை தந்த பல விஷயங்கள், கால ஓட்டத்தில் மறைவது மட்டும் குறையவே இல்லை.'காணாமல் போனவர்கள்' பட்டியலில் ஏற்கனவே இடம் பிடித்த தபால், தந்தி, ரேடியோ, கைக்கடிகாரம், கிட்டிப்புள்ளை, கோலிக்குண்டு, பேஜர், வாக்மேன் வரிசையில் பொங்கல் வாழ்த்து அட்டைகளும் இடம் பிடித்து நீண்ட நாட்கள் ஆகின்றன. கால மண்ணுக்குள் புதைந்துபோன மற்ற பொருட்களை விட, பொங்கல் வாழ்த்து அட்டைக்கு தனி மகத்துவம் இருந்தது. மற்ற பண்டிகைகளை எல்லாம் விட, பொங்கலுக்கு வாழ்த்து அனுப்புதல் என்பது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, முக்கிய கடமையாக கருதப்பட்டது.சாதாரண வாழ்த்துக்களா அவை: தேடித்தேடி பிடித்த அழகழகான படத்துடன் ஒரு அட்டையை வாங்கி, அதில் வெறும் பெயரை மட்டுமே எழுதுவது போதாது என்று மனதுக்குப் பிடித்த வாசகங்களையும், சொல்ல விரும்பும் செய்திகளையும் மாய்ந்து மாய்ந்து சொல்லியவர்கள் எவ்வளவு பேர்?அம்மாவின் பாசம், அப்பாவின் அறிவுரை, அத்தையின் அளவளாவல், மாமாவின் கரிசனம், சித்தப்பாவின் சுவாரஸ்யம், சித்தியின் செல்லம், நண்பனின் நக்கல், எல்லாவற்றுக்கும் மேலாக அத்தை மகளின் சிணுங்கல்... இப்படி எத்தனை உணர்வுகளை அவை தாங்கி வந்தன?இதைக்கூட விடுங்கள். எவ்வளவு படைப்பாளிகளை வாழ்த்து அட்டைகள் உருவாக்கின?அட்டையிலேயே துணுக்குகள், ஜோக்குகள், குட்டிக்குட்டி கவிதைகள், ஊர் நடப்புகள், உலக சிந்தனைகள் என எழுதத் துவங்கி, எழுத்தாளர் ஆனவர்கள் எத்தனை பேர்? எழுத்துத் திறமையை வெளியே சொல்ல கூச்சப்பட்ட, அச்சப்பட்ட ஆரம்பகட்ட படைப்பாளிகளுக்கு, களம் அமைத்துக் கொடுத்தவை இந்த அட்டைகள் தானே. இந்த கோணத்தில் ஒரு கணக்குப்போட்டால், தமிழை வளர்த்ததில் வாழ்த்து அட்டைகளுக்கும் பெரிய பங்கு இருப்பது தாமதமாக அல்லவா புரிகிறது? இது போன்று எழுதாததால் தானே, தவறில்லாத தமிழில் எழுதும் ஆட்களின் எண்ணிக்கை அருகி வரும் அவலமும் அரங்கேறுகிறது.'அமெச்சூர்' ஓவியர்களையும் அல்லவா இந்த அட்டைகள் உருவாக்கின. நாமே ஒரு வெற்று அட்டையை வாங்கி, அதில் நமக்கு தெரிந்த படத்தை வரைந்து, வரிந்துகட்டி வண்ணம் கொடுத்து, நண்பனுக்கோ உறவினருக்கோ அனுப்பி, அன்பை சொல்லும் அம்சம் இருக்கிறதே... அதில் கிடைக்கும் சந்தோஷம் இருக்கிறதே... அடடா!அதற்காக, 'ஓல்டு இஸ் கோல்டு' என்பதால் எப்போதும் பழசை கட்டிக்கொண்டு அழ முடியுமா என பலர் கேட்கின்றனர்.ஏனென்றால், உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் காகிதம் செய்வதற்காகவே 1.5 கோடி மரங்கள் வெட்டப்படுவதாக 'தி வைல்டர்னஸ் சொசைட்டி' என்ற சர்வதேச அமைப்பு, புள்ளி விபரத்தை வெளியிட்டு வருத்தப்படுகிறது.மரங்கள் மண் அரிப்பை மட்டுப்படுத்துகின்றன. காற்றின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றன. சுனாமியின் குரல்வளையை குறுக்கி விடுகின்றன. மேகத்திடம் மன்றாடி மழையை அழைத்து வருகின்றன. சுற்றுப்புறத்தில் ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்தி, நமது மூச்சு நின்று விடாமல் ஓட வைக்கின்றன. காய், கனி, பூ, மூலிகைகளை தரும் அட்சய பாத்திரமாக, ஆபத்பாந்தவனாக திகிழ்கின்றன. ஆக, நேற்றைய தேவை இன்றைக்கு காலாவதி ஆகி இருக்கலாம். இன்றைய தேவை, நாளைக்கு அவசியம் இல்லாமல் போகலாம்.எனவே, இதனால் அறியப்படுவது யாதெனில், அன்றன்றைய காலத்திற்கு எது தேவையோ, அது தான் நிலைத்திருக்கும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்