திரும்பும் திசை எங்கும் பொக்கிஷங்கள்
'பாண்டிய நாடே பழம்பதி' என்பது மாணிக்கவாசகரின் அணிவாசகம். இந்நாட்டின் தலைநகர் மதுரை. தமிழ் என்ற சொல்லும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த 'மதுரை'யும் இனிமை என்ற பொருளைத் தருவது போல், இந்நகரில் 'பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்' சத்தமில்லாமல் பழமையான வரலாறுகளை ஆவணமாய் பதிவு செய்து வருகிறது. இந்த அமைப்பு விழுதுகள் பரவிய ஆலமரமாய் தெரிந்தாலும், இதை தன்னந்தனியாய் தாங்கி நிற்பவர் தங்கம் தென்னரசு.பொறியாளர், முன்னாள் கல்வி அமைச்சர், எம்.எல்.ஏ., அரசியல்வாதி என்பது நமக்கு தெரிந்த இவரது அடையாளம். ஆனால் மறுபக்கம் பலருக்கும் தெரியாது. நூற்றாண்டுகளைக் கடந்த பழந்தமிழ் கல்வெட்டுக்களை சரளமாக வாசிக்கும் திறன்பெற்றவர் இவர். பழங்கால நாணய சேமிப்பாளர், வனம், பறவைகள் நலஆர்வலர் என பன்முகங்கள் கொண்டவர். அரசியல் பாடம் கற்கும் முன்னே இலக்கிய பாடம் கற்றதால் அப்பாடத்தை மறக்க முடியாமல் அதனோடு பயணம் செய்கிறார்.விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் வசிக்கும் இவரது வீட்டின் ஒரு பகுதி முழுவதும் நூலகம். சங்க, நவீன, ஆங்கில இலக்கியம் புத்தகங்கள் இவரோடு பேசுகின்றன. 'புத்தகத்தை தொடாமல் ஒரு நாள் கூட நான் இருந்ததில்லை. என்னை வளப்படுத்தியதில் பெரும் பங்கு இந்த புத்தகங்களையே சேரும்', என்றவரோடு ஒரு நேர்காணல்.ஏன் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்?இந்த ஆய்வு மையம் 4 ஆண்டுகளுக்கு முன்பு என்னால் துவக்கப்பட்டது. மதுரையில் செயல்பட்டு வருகிறது. இதில் வரலாற்று ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் என வரலாறு சார்புடைய பலர் என்னுடன் இருந்து செயல்படுகின்றனர். மறைந்த வரலாறுகளையும், இருக்கும் வரலாறுகளையும் ஆவணப்படுத்தும் பணியை முடிந்த அளவு செய்ய முயற்சிக்கிறோம்.தொல்லியல், வரலாறு மீதான காதல்?வரலாற்று புத்தகங்களை அதிகம் படித்திருந்ததால் இயல்பாகவே அது என்னிடம் இருந்தது. அதற்கு ஏற்ற வகையில் அமைச்சர் பதவிக்கு வந்த போது சேர, சோழர், பாண்டியர் காலத்து கலைப்படைப்புகளை பார்க்கவும், அது குறித்து கூடுதலாக தெரிந்து கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன. பல புராதன சின்னங்கள் சிதைக்கப்பட்டு கிடப்பதை பார்க்கும் போது, அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பல விஷயங்கள் நம் தலைமுறையிலேயே காணாமல் போய்விடுமோ என்ற ஆதங்கம் வரவே, தொல்லியல் மீதான காதல் இன்னும் அதிகமாகிவிட்டது.சாதனைகளாக கருதுபவை?ஆய்வு மையம் செயல்பாட்டிற்கு வந்த சில ஆண்டுகளிலேயே கல்வெட்டுக் கலை, தமிழும் சமஸ்கிருதமும், வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம் என மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். மதுரையின் முழுமையான வரலாறு அடங்கிய 'மாமதுரை' புத்தகம் அச்சாக்கப் பணியில் உள்ளது. இது ஒரு பெரும் முயற்சி. இந்த புத்தகங்களை எழுதுவதற்காக தொல்லியல் அறிஞர்கள் அதிக அக்கறை காட்டியுள்ளனர்.எப்போது நீங்கள் எழுதுவீர்கள்?புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். முகநூலில் எனது கருத்துக்களை சுருக்கமாக பதிவு செய்கிறேன். இதனை புத்தகங்கள் எழுதுவற்கான பயிற்சியாகவும் கருதுகிறேன். எனது பெற்றோர் கரும்பலகையில் தான் எழுதினார்கள். அக்கா (தமிழச்சி தங்கபாண்டியன்) பல புத்தகங்களை எழுதியுள்ளார். நான் முற்கால சோழர்கள் குறித்த ஆய்வுகளிலும், கோயில் கட்டுமானங்கள் குறித்த சில இறுதிகட்ட ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளேன். இவை தொடர்பான புத்தகங்களை விரைவில் வெளியிடுவேன்.புராதன சின்னங்களை வேறு எந்த வகையில் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள்?ஆவணப்படுத்துதல் முதல் பணியாக இருப்பது போல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கலை ஆர்வமிக்கவர்களை சென்று பார்க்க வைக்க வேண்டும். பாண்டிய நாட்டு வரலாற்று மையம் இது தொடர்பாக பல வரலாற்று சுற்றுலாக்களை நடத்தி உள்ளது, நடத்தி வருகிறது. அப்போது அந்த இடங்கள் குறித்த முழு வரலாற்றையும் கற்றுக் கொடுக்கிறோம். இதில் இளைய தலைமுறையினர் ஆர்வமுடன் பங்கேற்பது நம்பிக்கையை தருகிறது.பழமைகளில் வியந்த இடங்கள்?நான் செல்லாத வரலாற்றுத் தலங்கள் இல்லை. நம்மூர்களில் உள்ள சிறு கோயில்கள் கூட கலைநுட்பங்களில் ஆச்சரியப்படுத்தும். ஆனால் அவற்றின் பெருமையை அந்த ஊரார் கூட தெரிந்திருக்க மாட்டார்கள். காலத்தாலும், சூழல்களாலும் பல சிறப்புகள் இன்னும் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. மாமல்லப்புரத்தின் சிறப்புகளுக்கு இணையாக கழுகுமலை உள்ளது. ஆனால் கழுகுமலை சிறப்புகள் இன்னும் மக்களிடம் சேரவில்லை. உடைந்த கல்வெட்டாக இருந்தாலும் சரி, முன்னோர் பயன்படுத்திய பொருட்களின் மிச்சங்களும், எச்சங்களும் கண்டெடுக்கப்படும் எந்த இடமாக இருந்தாலும் அந்த இடங்களையும் வியந்து பார்ப்பேன். தென் மாவட்டங்கள் அனைத்திலும் திரும்பும் திசைஎங்கும் வரலாற்று பொக்கிஷங்கள் ஏதாவது ஒரு வடிவத்தில் பரவிக்கிடக்கின்றன.பழமையின் அழிவுகள் பற்றி வருந்தியதுண்டாவரலாற்றின் பெருமை தெரியாமல், நம் பெருமைகளை நாமே சிதைத்து சிறுமைப் படுத்துகிறோம். பழமையான இடங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் போது ஏற்படுத்தும் அழிவுகள் பற்றியும் மிகவும் வருந்தியிருக்கிறேன். ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள நாயக்கர் அரண்மனையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வெள்ளை அடிக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் அந்த வெள்ளை அடுக்குகள் பெயர்ந்து விழுந்த போது, அதன் உள்ளே அழகிய ஓவியம் இருப்பது தெரிந்தது. இதே போல் பல சிலைகள், கலைகள் வெளியுலகிற்கு தெரியாமலே உள்ளன. இதையும் அழிவாகத்தான் நினைக்க வேண்டியுள்ளது.பொறியாளரான உங்களை வரலாறு என்ற பெருங்கடலில் தள்ளியது யார்?'பொன்னியின் செல்வன்' புத்தகம் தான். மல்லாங்கிணறில் நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, அண்ணாமலைப் பல்கலையில் படிக்க சென்ற போது, நான் படித்திருந்த பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் உலவிய பகுதிகளை தேடிச் சென்று பார்த்தது முதல், வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்ற ஆசை எட்டிப்பார்த்தது. அது இப்போதும் தொடர்கிறது.பறவைகளின் காதலராமே நீங்கள்?சிறுவயதில் எங்கள் ஊரில் பார்த்த பல பறவைகளை சலீம்அலி, டாக்டர் ரத்தினம் புத்தகங்களில் பார்த்த போது எனக்கு பறவைகள் மீது இன்னும் அதிக பாசம் வந்தது. மதுரைக்கு செல்லும் போது விமான நிலையம் அருகில் உள்ள கண்மாயில் முகாமிடும் பறவைகளை நின்று ரசிப்பேன். பறவைகளின் பாடல்களை கேட்க வனங்களை தேடிச் செல்கிறேன். பல பறவைகளை பார்த்தாலும் காரியாபட்டியில் சின்ன வயதில் பார்த்த அன்றில் பறவைகளை இப்போது பார்க்கும் போதும் மனம் மகிழும்.2015 ல் எதை திட்டமிட்டிருக்கிறீர்கள்?அனைத்து ஆவணங்களும் உள்ளடங்கிய ஆய்வு மையம், கண்காட்சி இவை எல்லாம் அமைக்க வேண்டும். இளைஞர்கள் புத்தக வாசிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தால், புத்தகங்கள் அவர்களை புதுப்பிக்கும். வரலாறும் காப்பாற்றப்படும்.வரலாற்று ஆய்வாளர் தங்கம் தென்னரசுthennarasu.min@gmail.com