உள்ளூர் செய்திகள்

பேச்சில்லா கிராமங்கள்

''நான் பிறந்த மண்ணை தொட்டுப் பார்க்க விரும்பினால் இன்று மூச்சடக்கி மூழ்க வேண்டியிருக்கும். இன்று அந்த நிலம் வைகை அணையின் நீர் தேங்கிய பரப்பிற்கு கீழே நித்திரை செய்து கொண்டிருக்கிறது. 1950ல் வைகை அணை கட்ட 15 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. அவற்றுள் ஒன்று எங்கள் மேட்டூர். 1958 ல் அணை கட்டி அதன் நீர்பிடிப்பு பகுதியில் இருந்த சிற்றூர்கள் இந்திய வரைபடத்தில் இருந்து துடைக்கப்பட்டது. அப்போது அழுது கொண்டே ஊரைவிட்டு வெளியேறும் அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு இடுப்பளவு தண்ணீரில் நனைந்த கால் சட்டையோடு 5 வயதுச் சிறுவனாக இருந்த நானும் வெளியேறினேன். நான் புறப்பட்ட இடம் இதுதான். என் வாழ்வின்- படைப்பின் நதிமூலம் இதுதான். சென்னை எனக்கு மொழியின் தொழிற்சாலை; என் கிராமம் தான் பாடசாலை,'' சொன்னது யாராக இருக்கும்? -கவிஞர் வைரமுத்துவின் வ(லி)ரிகள் தான் இவை.அணைகள் கட்டுதல், சாலை விரிவாக்கம், சுரங்கம் தோண்டுதல் என வளர்ச்சிப் பணிகள் பெயரில் காவு கொடுக்கப்பட்ட கிராமங்கள் ஏராளம். மேட்டூருக்கு சாட்சி சொல்ல வைரமுத்து இருக்கிறார். மற்ற கிராமங்களுக்கு?ஆழிப்பேரலையில் 50 ஆண்டுகளுக்கு முன் உருக்குலைந்த தனுஷ்கோடியின் வரலாறு காலம் காலமாக பேசப்படுகிறது. ஆனால் சில அரை நூற்றாண்டுகளுக்கு முன் காணாமல் போன கிராமங்களின் பக்கம் பார்வை திரும்பவில்லை. கிராமத்தின் பெயரில் நிர்வாகம் இருக்கும். ஆனால் கிராமம் இருக்காது. பணியாற்ற வி.ஏ.ஓ.,.. ஆனால் பயன்பெற மக்கள் இருக்க மாட்டாங்க. அவை தான் 'பேச்சில்லா கிராமங்கள்'.முன்னொரு காலத்தில் மக்கள் வசித்து இன்று அதன் சுவடுகளை மட்டும் புதைத்து நிற்கும் நிலப்பகுதிக்கு சூட்டிய பெயர் தான் 'பேச்சில்லா கிராமம்'. அங்கு நஞ்சை உண்டு, புஞ்சை உண்டு, விவசாயமும் உண்டு. ஆனால் மனிதன் இல்லை. இதோ வாழ்ந்து மறைந்த சில கிராமங்களின் ரகசியங்கள்.வேலாம்பூர்: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே விருதுநகர் செல்லும் வழியில் உள்ளது வேலாம்பூர் கிராமம். 40 ஆண்டுகளுக்கு முன் மனிதர் வாழ்ந்த பகுதி என்பதற்கு சாட்சியாக கட்டட இடிபாடுகள், கோயில்கள் உள்ளன. வேலாம்பூரை தலைமையாகக் கொண்டு வருவாய்த்துறையின் கீழ் சில கிராமங்கள் இயங்குகின்றன.ஊராட்சிக்கு பெயரும் வேலாம்பூர் தான். சொற்ப எண்ணிக்கையில் இருந்த குடும்பங்களும் இடம் பெயர்ந்ததால் இப்போது ஆளில்லை.''இக்கிராமம் பற்றி 250 ஆண்டுகளுக்கு முன் செப்பு பட்டய குறிப்பு உள்ளது. வேலாம்பூர், பிள்ளையார்நத்தம், வெம்பக்கோட்டை, திருமங்கலத்தை சேர்ந்தவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பக்தர்களுக்கு உதவும் வகையில் நற்பணிகளில் ஈடுபட்டதற்கு சான்று உள்ளது,” என்கிறார் ஓய்வு பெற்ற தொல்லியலாளர் சாந்தலிங்கம்.சிறுதூர்: மதுரை புதுநத்தம் ரோட்டில் இருந்தது சிறுதூர். அந்த வருவாய் கிராமத்தின் கீழ் மேனேந்தல், சக்கிலியங்குளம் உட்பட சில பகுதிகள் உள்ளன. மனிதர்கள் வசித்ததற்கு அடையாளமாக சிலைகள், உரல், ஓடு, செங்கல் இருந்ததை வியப்புடன் கூறுகின்றனர் வயதான சிலர். ஆனால் இன்று அங்கு சிறுதூர் இருந்ததற்கான அடையாளமாக இருப்பது ஒரு பள்ளியும், விவசாய நிலமும் மட்டுமே.ஆயகுளம்: விருதுநகர் மாவட்டம் அ.முக்குளம் அருகே இருந்தது ஆயகுளம். விவசாய நிலம் இருந்தாலும் அங்கு மக்கள் வசித்ததற்கு சான்றாக கட்டட இடிபாடுகள் மட்டுமே உள்ளன. அங்கிருந்தவர்கள் அருகிலுள்ள வந்தவாசிக்கு இடம் பெயர்ந்தனர். இது போல் இன்னும் எத்தனையோ கிராமங்கள் மன்னர்கள் படையெடுப்பு, இயற்கை பேரழிவு, பஞ்சம், கொடிய நோய்கள், போன்ற காரணங்களால் உருக்குலைந்திருக்கலாம். புதிர்களோடு அமைதியாக பெயர்களை மட்டும் தாங்கி மக்கள் மனதிலும், ஆவணங்களிலும் நிலைபெற்று உள்ளன இந்த கிராமங்கள். இவற்றின் தொப்புள் கொடி உறவுகள் திசையெங்கும் பரவி உள்ளன. அவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை வந்து தாய் மண்ணில் குல தெய்வங்களை வழிபடுகின்றனர். ஆய்வாளர்கள், காணாமல்போன 'பேச்சில்லா கிராமங்களை'அகழாய்வு செய்தால் ஆதிகுடிகளின் வாழ்க்கை பற்றிய புதிர்களின் முடிச்சு அவிழும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்