உள்ளூர் செய்திகள்

இரும்பாய் மாறிய கரும்பு சக்கை கவலையில் பொக்கைகள்

'பழநிக்கு போய் பஞ்சாமிர்தம் சாப்பிடாதவரும், திருப்பதிக்கு போய் லட்டு வாங்காதவரும், தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காதவரும், பொங்கலுக்கு கரும்பு கடிக்காதவரும்,' திருப்தி அடைவது சிரமம்தான்.இது பொங்கல் சீசன் என்பதால், கரும்புக்கு வருவோம். பொங்கல் இனிப்பான உணவு என்றாலும், கரும்புக்குத் தான் அன்றைய தினம் குட்டீஸ்கள், குதூகளிப்பர். காரணம், வேண்டிய நேரத்தில் பொங்கல் செய்து விடலாம்; கரும்பு, சீசனில் மட்டும் தான் கிடைக்கும் என்பதால். கட்டுக்கட்டாய் வந்திறங்கும் கரும்புகளை, சக்கையாக்கி வீசும் நம்மவர்களிடம், யானைகள் கூட தோற்றுவிடும். பொங்கலுக்கு வாங்கும் புத்தாடையில், கரும்பு கறை இல்லை என்றால், அவருக்கு பொங்கல் கொண்டாட்டம் முழுமை பெறவில்லை, என்றே அர்த்தம். அதே நேரத்தில்,அனைத்துத்தரப்பினரும் கரும்பு சுவைப்பதில்லை. ஐம்பதை கடந்து விட்டால், அடக்கி வாசிக்க (சர்க்கரை நோய்) வேண்டிய கட்டாயம் ஒருபுறம்; பற்களின் பலவீனம் மறுபுறம். சிறுவயதில் சின்னாபின்னமாக்கிய கரும்புகளை, முதுமையில் பார்த்து ஏங்க வேண்டிய கட்டாயம். தோகை தரையைத் தொட, பேரன், பேத்திகள் தூக்கி ஓடும் கரும்புகளை பார்க்கும் முதியோருக்கு, ஒரு விதமான ஏக்கம். 'கைக்கு எட்டி, வாய்க்கு எட்டாமல் போன,' கரும்புகளை, அவர்களால் பார்க்க மட்டுமே முடியும். பொங்கல் கொண்டாட்டத்தில் இருக்கும் இளசுகளுக்கு, பெரிசுகளின் அந்த ஏக்கம், புரிவதில்லை. கரும்புச்சக்கை, சக்கையாய் குவியும் போது, பொக்கை வாயுடன் நிற்பவரால் என்ன செய்ய முடியும்? பற்களை இழந்தோருக்கு, கரும்பும், இரும்பு தான். ஒவ்வொரு பொங்கல் பண்டிகையையும் ஏக்கத்துடன் சந்திக்கும் மதுரைவாசிகள் சிலரை தேடிபிடித்தோம். இதோ அவர்கள் சொல்வதை, நீங்களே கேளுங்கள்:

மீனாட்சியம்மாள்:

எனக்கு 86 வயசு ஆவுது தம்பி. சின்ன வயசுல என்னை மாதிரி கரும்பு தின்ன முடியாது. என்னை பெத்தவங்களும் சரி, கட்டுனவரும் சரி, பொங்கல் வந்துச்சுன்னா... வேணும்ங்கிற கரும்பு வாங்கித் தருவாக. வாய் புண்ணாகுற அளவுக்கு கரும்பு கடிச்ச காலம் உண்டு. இன்னைக்கு, கரும்பை பாக்கதான் முடியுது. யாராவது கரும்பு கடுச்சா, எச்சில் ஊறும்; என்ன செய்யுறது, நாம கடிக்க முடியாதே!

கருப்பையா:

85 வயசாயிடுச்சுப்பா... பல் இல்லாததால, நான் பேசுறது கூட உங்களுக்கு புரியாது. ஆனா, சின்ன வயசுல, என் நிலைமையே வேற. முழுக்கரும்பை, வெட்டாம சாப்பிடுவேன். அந்த அளவுக்கு கரும்பு பிடிக்கும். 'எப்படா பொங்க வரும், கரும்பு கடிக்கலாம்னு,' ஆசையா இருக்கும். 55 வயசு வரை கரும்பு கடிச்சவன் தான்; அப்புறம் முடியலை தம்பி.

செல்லம்:

'கரும்பு உடம்புக்கு நல்லதுன்னு,' சின்ன வயசுல இருந்தே, எங்க அப்பா, அம்மா சொல்லுவாங்க. 72 வயசு ஆனதால, பற்கள் சிதஞ்சுட்டு இருக்கு. இப்போ போய் கரும்பை கடிச்சா, எஞ்சி இருக்கிற ஒன்னு, ரெண்டு பல்லும் கொட்டி போயிடும். அம்மா, அப்பா சொன்னதை காப்பாத்தணுமேனு, பொங்கல் அன்று, கரும்பு ஜூஸ் குடிப்பேன், என்றனர். இதுபோல் எத்தனையோ இதயங்கள், கரும்பு ஆசைகளை சுமந்து, கனத்த இதயத்துடன்(?) பொங்கல் கொண்டாடுகின்றன. உங்கள் வீட்டிலும், முதியோர் இருந்தால், 'ஜூஸ்' கொடுத்தாவது அவர்களின் ஆசையை நிறைவேற்றுங்களேன் பிளீஸ்!-நவநீ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்