உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் விரும்பும் ரோஜா!

இன்று குழந்தைகள் தினம்!குழந்தைகள் மீது, ஜவஹர்லால் நேருவுக்கு அலாதி பிரியம்; இந்திய பிரதமராக பொறுப்பேற்ற பின், மதுரை வந்திருந்தார். அதிகாரிகளுடன் பாதுகாப்பு மிக்க காரில் பயணித்த போது, சாலையோரம் பலுான் விற்றுக் கொண்டிருந்த ஏழை முதியவரைக் கண்டார்.உடனே காரை நிறுத்தி, அங்கிருந்த குழந்தைகளுக்கு பலுான் வாங்கி தந்தார். அவர்களுடன் விளையாடவும் ஆரம்பித்து விட்டார். பலுான்களை வாயால் ஊதி மகிழ்ந்து, சிறு பிள்ளையாகவே மாறியது கண்டு ஆச்சரியமடைந்தனர் அதிகாரிகள்.துணிச்சல்காரர்!இந்தியா, சுதந்திரம் பெற்ற சில நாட்களில், பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார் நேரு. அங்கு அடாவடியாக வழிமறித்தவன், 'சுதந்திரம் பெற்றதால், என் போன்றவருக்கு என்ன பயன்...' என திமிராக கேட்டான். சற்றும் கோபப்படவில்லை நேரு.அவன் முதுகில் செல்லமாக தட்டியபடி, 'பிரதமராகிய என்னையே வழிமறித்து, கேள்வி கேட்கும் துணிச்சல் வந்திருக்கிறதல்லவா... இதுதான் சுதந்திரத்தின் மகிமை. ஆங்கிலேயர் ஆட்சியில், இது போன்று கேட்டிருந்தால், உன் தலை உடலில் இருக்குமா என்பதே சந்தேகம் தான்...' என்றார். தவறை உணர்ந்து பணிந்து மன்னிப்பு கேட்டான்.விமர்சன விரும்பி!புகழின் உச்சியில் நேரு இருந்த காலம். எதிர்த்துப் பேச ஆளே கிடையாது. கொல்கத்தாவில் வெளிவந்த ஆங்கில நாளிதழில், 'நேருவின் போக்கு சர்வாதிகாரமாக உள்ளது; சர்வாதிகாரியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை; தயவு செய்து யாராவது தட்டி கேளுங்கள்...' என்ற கருத்துடன் ஒரு கட்டுரை வெளிவந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடும் கண்டனம் தெரிவித்தனர் காங்கிரஸ் கட்சியினர். கட்டுரை எழுதியவரை தேடிக் கொண்டிருந்தனர்.எழுதியது நேரு தான்; புனைப் பெயரில் எழுதியிருந்தார்.விமர்சனமே இல்லாவிட்டால், சர்வாதிகாரியாக மாறும் நிலை ஏற்படும் என்பதே அவரது எண்ணம். அதை மனதில் கொண்டே, பிரதமர் பதவியை சிறப்பித்தார்.புத்தக பித்தர்!ஒரு நாள் வெளியூர் புறப்பட்டார் நேரு; கிட்டத்தட்ட, 10 மணி நேர பயணம். பெட்டியில், 50 புத்தகங்களை எடுத்து வைத்தார். இதை கவனித்த இந்திரா, 'அப்பா, இவ்வளவு புத்தகங்களையும் படிக்க முடியுமா...' என கேட்டார்.'படிக்க முடியாது தான்; ஆனால், நுால் எழுதிய அறிஞர்கள் அனைவரும் என்னுடன் இருப்பதாக உணர்வேன் அல்லவா... அது அபார சக்தியைத் தரும்; அதனால் தான் எடுத்து செல்கிறேன்...' என்றார்அந்த அளவு புத்தகப் பித்தராக இருந்தார்.மலர்களின் ராஜா!சட்டை பட்டனில், அழகிய ரோஜா மலரை அணிந்திருப்பார் நேரு. இந்தப் பழக்கம், சுதந்திரா கட்சியை சேர்ந்த நரசிங்மேத்தாவிடம் கற்றது. ஒரு நாள் நேருவை காண, அலகாபாத், ஆனந்தபவனுக்கு சென்றிருந்தார் நரசிங்மேத்தா. அவரது சட்டையில், அழகிய ரோஜா மலர் இருந்தது. இதை கவனித்து பாராட்டிய நேரு, அத்துடன் நிற்கவில்லை. அருகில் ரோஜா செடியில் இருந்து பூவை பறித்தார். அது போலவே, சட்டையின் மேல் பட்டனில் சூடிக்கொண்டார். பின்னாளில், அதுவே பழக்கமாகியது. இன்றும் அவரது அடையாளமாக திகழ்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !