முன்னேற வேண்டிய மூவர்!
ஈரோடு மாவட்டம், கோபி, பங்களாபுதுார், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1976ல், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தலைமை ஆசிரியராக சுப்பிரமணியம் பணிபுரிந்தார். நன்றாக பாடம் நடத்துவார். மாணவ, மாணவியரிடம் அன்பாக பழகுவதுடன், கண்டிப்பாகவும் இருப்பார். வகுப்பில் முதல், மூன்று இடங்களை பிடிப்பவரையும், கடைசி இடத்துக்கு பின் தங்குபவரையும் பட்டியலிட்டு, 'முதல் மூவர்; முன்னேற வேண்டிய மூவர்' என்று, வகுப்பறையில் ஒட்ட ஏற்பாடு செய்வார்.அதைப் பார்க்கும் எங்களுக்கு, 'முன்னேற வேண்டிய மூவர்' பட்டியலில் இடம் பிடித்து விடக்கூடாது என்ற எண்ணம் மேலிடும். கவனமாக படித்து, 10ம் வகுப்பில், 'முதல் மூவர்' பட்டியலில் இடம் பிடித்தேன்.படிப்பை முடித்து சத்துணவு அமைப்பாளர் பணியில் சேர்ந்தேன். ஒரே பள்ளியில், 35 ஆண்டுகள் பணிபுரிந்து, நற்பெயருடன் ஓய்வு பெற்றேன்.இப்போது, 62 வயதாகிறது; அந்த தலைமை ஆசிரியரின் மேன்மையான செயல், மனதில் தங்கியுள்ளது.- ப.சகுந்தலா, திருப்பூர்.தொடர்புக்கு: 97887 11663