உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

அருந்திறன் ஆந்தைஆந்தை, இரவு நேரத்தில் நடமாடும் உயிரினம். எலி, தவளையை வேட்டையாடும். மற்ற பறவைகளுக்கு உள்ளது போலன்றி, மனிதர்களைப் போல, கண்கள் முன் நோக்கியிருக்கும். தலையை, 270, 'டிகிரி' கோணத்தில் இருபுறமும் சுழற்றி பார்க்கும் திறன் கொண்டது. சக்தி வாய்ந்த செவிகளைக் கொண்டது. ஒலி வரும் துாரத்தை கணித்து, இரை உள்ள இடத்தை துல்லியமாக அறிந்து வேட்டையாடும்.குறைந்த வெளிச்சத்திலும், பார்க்கும் திறன் கொண்டது. மெல்லிய இறகுகள் நிறைந்திருப்பதால், ஓசையின்றி பறந்து நுட்பமாக வேட்டையாடும். வலிமையான நகங்கள், வளைந்த கூர்மையான அலகு போன்றவை, ஆந்தையின் செயல்திறனை அதிகரிக்கின்றன. நீலகிரி மாவட்டம், முதுமலையில் வாழும் காட்டாந்தை, முயல் போன்ற உயிரினங்களையும் எளிதாக பிடித்து உண்ணும். மரங்களில் அடைய வரும், மயில் போன்ற பெரிய பறவைகளைக் கூட, கொல்லும் வலிமை பெற்றது. நீர்நிலைகள் அருகே வசிக்கும் ஒருவகை ஆந்தை, மீன், தவளை, நண்டுகளை கால்களால் லாவகமாக பிடித்து இரையாக்கும். தோட்டம், வயல்வெளியில் நடமாடும் எலிகளை, வெண்ணாந்தை என்ற கூகை பிடித்து உண்ணும். அது, விவசாயிகளின் உற்றத் தோழனாக விளங்குகிறது. வெண்ஆந்தைகளை ஈர்க்க, சிறிய மரப்பெட்டிகளை, வயல் ஓர மரங்களில் கட்டி வைக்கின்றனர் விவசாயிகள்.இனப்பெருக்காலத்தில், ஆந்தையின் ஆவசேம் எல்லை மீறும். ஒரே இரவில், ஆறு எலிகளைக்கூட கொல்லும். இதை வியப்புடன் ஆராய்ந்து வருகின்றனர் விஞ்ஞானிகள்.உலகில், அண்டார்டிகா தவிர, எல்லா கண்டங்களிலும், ஆந்தைகள் வசிக்கின்றன. இவற்றில், 200க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளதாக கண்டறிந்துள்ளனர். பல இனங்கள் முழுமையாக அழிந்துவிட்டன. மாந்திரீக சடங்கு, பாரம்பரிய மருத்துவம் என, பல காரணங்களுக்காக கொல்வதால், ஆந்தை இனம் அழிந்து வருகிறது. சில இனங்களில், 50 க்கும் குறைவான பறவைகளே உள்ளன. அழியும் நிலையில், ஆறு இனங்களும், அழிவின் விளிம்பில், ஏழு இனங்களும், உலகம் முழுவதும் உள்ளதாக, பறவையியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. செல்வ செழிப்பின் கடவுளான லட்சுமியின் வாகனம், ஆந்தை. பேய், பிசாசுகளுடன், இந்த எளிய பறவையை தொடர்பு படுத்துவதால், வெறுக்கும் மனப்பான்மை வளர்ந்து உள்ளது. இந்த பறவை பற்றி தவறாக எண்ணுவதை விடுத்து, அன்பு செலுத்த பழக வேண்டும். அரிய காட்டு உயிரினத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.பெருகும் எலி, பூச்சிகளை தின்று, சூழலை சமநிலையில் பேணுவதாலும், வேளாண்மை, தானிய பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுவதாலும் இவற்றை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !