அதிமேதாவி அங்குராசு!
சர்வதேச நாட்டாமை!தமிழ் சினிமாவில், நாட்டாமை காட்சிகளை பார்த்து இருப்பீர்கள். ஊர் பிரச்னைகளில் விசாரித்து தீர்வு சொல்வார். குளறுபடியும் நடக்கும்.நீதியை நிலைநாட்ட, வட்டார, மாவட்ட, மாநில, தேசிய அளவில் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னையை தீர்க்க, சர்வதேச நீதிமன்றம் உள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின் அமைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மை நீதிமன்றமாக உள்ளது. ஐரோப்பிய நாடான நெதர்லாந்து, தி ஹேக் நகரில் இயங்கி வருகிறது. இங்கு, 15 பேர் நீதிபதியாக பதவி வகிக்கின்றனர். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஐ.நா.பொதுச்சபை மற்றும் பாதுகாப்பு சபையில் நடக்கும் ஓட்டெடுப்பு மூலம் நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவர். எந்த நாட்டுக்காரரும், சொந்த நாட்டு பிரதிநிதியாக செயல்பட முடியாது. மாறாக, சுதந்திரமாக செயல்படும் அதிகாரம் உண்டு.இதில் நம் நாட்டை சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரியும் உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், ஏப்ரல் 27, 2012ல் சர்வதேச நிதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன், புதுடில்லியில் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தார். உலக நாடுகள் தொடுக்கும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவது, சர்வதேச நீதிமன்றத்தின் வேலை. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் உறுப்பு அமைப்புகளுக்கு, சர்வதேச சட்டம் தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கும். ஐ.நா.சபையில் உறுப்பினராக உள்ள நாடு மட்டுமே, இந்த நீதிமன்றத்தை அணுகமுடியும்.வழக்கில் விவாதங்களைக் கேட்ட பின், நீதிபதிகள் குழு தனிக்கூட்டம், பிரத்யேக அறையில் நடக்கும். அங்கு எடுக்கும் முடிவு, சர்வதேச நீதிமன்ற பொது அவையில் தீர்ப்பாக வாசிக்கப்படும். இதுவே இறுதியானது. மேல்முறையீடு செய்ய முடியாது.நாடுகளுக்கு இடையேயான எல்லை விவகாரம், இறையாண்மை, பணயக்கைதிகள், தஞ்சம் கோருவோர் உரிமை உள்ளிட்ட விவகாரங்களில், 1946 முதல் தீர்ப்பு வழங்கி வருகிறது.எல்லா வழக்குகளிலும் வெற்றிகரமாக செயல்பட்டதாக கூற முடியாது. அதற்குக் காரணம் தத்துவ மாறுபாடுள்ள பல நாட்டு அரசு தான். தனிநபரை தண்டிக்க, சர்வதேச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வேறுபட்டது. இது, நெதர்லாந்து, டென்ஹாக் நகரில், 2002 முதல் இயங்கிவருகிறது.சர்வதேச அளவில் நடக்கும் கடும் குற்றங்கள், இனப்படுகொலை, மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்களை விசாரிக்கும்.நாடுகளில் நல்லாட்சி நடந்தால் நீதிமன்றங்களுக்கு தேவையே இருக்காது. சட்டத்தின் வழி வாழ்வோம்.சுவையில் நலம்!உணவு என்றவுடன், நாவில் சுவை உணர்வு மிகும்.எதுவும் அளவுக்கு மிஞ்சக் கூடாது. அமுதமும் நஞ்சாகிவிடும்.காரவகை உணவுகள் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கும். குறிப்பாக பச்சைமிளகாய், உடலுக்கு நல்லது. எந்த வகை காரம் தேவை என்பதை அறிந்து உண்ண வேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி, பட்டை போன்றவை, 'அல்கலைன்' தன்மை கொண்டவை. காய்ந்த மிளகாய், மிளகு, பூண்டு போன்றவை, அமிலத் தன்மை உடையது.காரவகைகளை வெறும் வயிற்றில் உண்ணக் கூடாது. புளிப்புச் சுவை, உடலில் அமிலத்தை சுரக்கும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும். தக்காளி, மாங்காய், எலுமிச்சம், புளி எல்லாம் புளிப்பு தான். எதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்ற முறை உள்ளது. பருவநிலைக்கு ஏற்ப உபயோகிக்கும் அளவு மாறுபடும். அதுபோல, உணவில் ரசம், தினமும் சேர்த்துக் கொள்வது நன்மை தரும். அன்றாடம் உண்ணும் உணவில், அறுசுவைகள் சேர்த்தாலே போதும். எதை, எப்போது சாப்பிட வேண்டும் என்பதை, அனுபவம் மிக்க மூத்தோரிடம் தெரிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். பளிச் ரகசியம் வெள்ளி உலோகத்தில் செய்த பொருட்கள், கறுத்துப் போகாமல் இருக்க... வெண்மை நிற பல்பொடியை மெல்லிய பருத்தி துணியில் கட்டி துடைக்கலாம்ஆலிவ் எண்ணெய்யை மிருதுவான பருத்தி துணியில் நனைத்து, மென்மையாகத் தேய்த்து, வெள்ளை துணியால் துடைக்கலாம்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.