பீமா வெடி!
குட்டி முயல் முத்து, பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தது. வழியில் தீபாவளி புதிய வரவாக, 'பீமா வெடி' விளம்பர சுவரொட்டிகளைக் கண்டு அசந்து போனது. மகாபாரத பீமன், கதையை தோளில் சுமந்து நிற்பதை போன்ற படம் விளம்பரமாக வந்திருந்தது.பள்ளியில், குட்டி யானை அம்பி, புலிக்குட்டி பொம்மன், கரடிக்குட்டி கருப்பன் எல்லாருமே, பீமா வெடியின் பெருமை பற்றியே பேசின. எங்கும் அந்த வெடி பற்றிய பேச்சாகவே இருந்தது.மாலை வகுப்பு முடிந்து, வீடு திரும்பியதும், 'அம்மா... தீபாவளிக்கு, 'பீமா வெடி' வந்திருக்கு. இடி இடிப்பதை போல சத்தமா வெடிக்குமாம்; எனக்கு அதை வாங்கி கொடுங்க...' என்றது குட்டி முயல்.'வாங்கி தர சொல்றேன்... வந்து காபியை குடி...' என்றது அம்மா முயல்.தீபாவளிக்கு முதல் நாள் -'எனக்கு வெடி வாங்கிட்டு வந்துட்டாங்களா...' அம்மாவிடம் கேட்டது முத்து.'அதோ... அந்த அட்டை பெட்டிக்குள் இருக்குது...' ஆவலுடன், அட்டை பெட்டியை பிரித்தது. அதில், கம்பி மத்தாப்பு, தரை சக்கரம், பூச்சட்டி என்ற பூவானம் எல்லாம் இருந்தன. ஆனால், எதிர்பார்த்திருந்த, பீமா வெடி மட்டும் இல்லை.கண்கள் கலங்கியபடி, 'பீமா வெடி வாங்கலயா...' என்று கேட்டது முத்து.'அது ஆபத்தானது. அதை வாங்கி தர மாட்டேன்; அப்பா, நிறைய மத்தாப்புகள் வாங்கி வந்திருக்காங்க; அதை வெடிச்சா போதும்...' என்றது அம்மா முயல்.'எனக்கு மத்தாப்பு வேண்டாம்...'அட்டைப் பெட்டியை தள்ளி அடம் பிடித்து, அழ துவங்கியது முத்து.பெற்றோர் கூறியதை, கேட்கவே இல்லை. இரவு சாப்பிட கூட இல்லை.'அவனுக்கு, அந்த வெடி தான் வேணுமாம்; போய் வாங்கிட்டு வாங்க...' பரிந்தது அம்மா முயல்.'சரி... சரி... பீமாவெடி வாங்கி கொடுக்குறேன்...'பட்டாசுக் கடைக்கு புறப்பட்டது அப்பா முயல்.விடிந்தால் தீபாவளி -அதிகாலையே முத்துவை எழுப்பிய அம்மா, 'எண்ணெய் தேய்ச்சி குளிக்கணும்...' என்றது.'பீமா வெடியை, வெடிச்ச பின் தான் குளிப்பேன்...'வாசலுக்கு சந்தோஷமாக ஓடியது முத்து.'கிட்ட நின்னு கொளுத்தாதே... துாரத்தில நில்லு...'அறிவுரைத்தது அப்பா முயல். 'எனக்கு பயம் இல்ல...' என்றபடி, வீதியில் பீமா வெடியை வைத்து திரியில் தீயை வைத்தது முத்து. தீப் பொறிப்பட்டதும், 'சுர்...' என சத்தமிட்டு பலத்த ஓசையுடன் வெடித்தது.'அம்மா...'அலறி சாய்ந்தது முத்து. மருத்துவமனைக்கு அழைத்து சென்றன மிருகங்கள். ஒரு வார சிகிச்சைக்கு பின், வீடு திரும்பிய முத்துவுக்கு, தீக்காயங்கள் கொஞ்சம் ஆறியிருந்தன. 'வீட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாட முடியல...' என்றது அம்மா முயல்.'அப்பா கூறிய அறிவுரையைக் கேட்காததால இப்படி ஆயிடுச்சு. இனிமேல், தீபாவளி வரும் போது, பெரிய வெடி வேண்டாம்; மத்தாப்பு மட்டும் போதும்...' என்றது முத்து.அடுத்த தீபாவளி அன்று -புது உடை உடுத்தி, தீபாவளி பலகாரத்தை தின்றபடி வாசலில் பூவானத்தை கொளுத்தியது முத்து.அது, 'சர்...' என, வண்ணத் தீப்பொறிகளை உதிர்த்தது. அதைக் கண்டு, கை கொட்டி சிரித்தது, குட்டி முயல் முத்து.குழந்தைகளே... பெரியோர் கூறும் அறிவுரைகளை கேட்டு, தவறாமல் கடைபிடித்தால் நன்மையே வந்து சேரும்!