நல்ல நண்பர்கள்!
விட்டலும், கேசவும் நெருங்கிய நண்பர்கள். இணை பிரியாமல் பழகி வந்தனர். மனதில் இருப்பதை, வெளிப்படையாக பேசுவது, இருவருக்கும் பிடிக்கும்; இதனால் நட்பு வலுவடைந்தது.போட்டி, பொறாமை இல்லாமல் புரிந்து வைத்திருந்தனர். விட்டு கொடுக்கும் மனப்போக்கை கொண்டிருந்த இருவரும் ஒரு நாள் கூட சண்டை போட்டது இல்லை.விட்டலின் எதிர் வீட்டில் வசித்து வந்த வேலனுக்கு இது பிடிக்கவில்லை. மூவரும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்தனர்.இருவரையும் பிரிக்க திட்டங்கள் போட்டான். எதுவும் நிறைவேறவில்லை. இதனால், வேலனுக்கு பொறாமையும், கோபமும் அதிகரித்தது. 'எப்படி பிரிப்பது' என்று, யோசித்தான்.அன்று வகுப்பில் ஆசிரியர், சிங்கமும், நான்கு எருதுகளும் பற்றிய கதை ஒன்றை கூறினார். அது -நான்கு எருதுகள் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. அவற்றை சிங்கத்தால் வேட்டையாட முடியவில்லை; இதனால் தீவிர யோசனை செய்து எருதுகளின் ஒற்றுமையை குலைத்தது சிங்கம்; எருதுகள் தனி தனியாக பிரிந்தன. ஒவ்வொரு எருதாக வேட்டையாடி கொன்று தின்றது சிங்கம்.இந்த கதையை கூறி, 'எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்...' என்றார் ஆசிரியர்.வேலனுக்கு, கதையில் வரும் சிங்கத்தை மிகவும் பிடித்திருந்தது; கதையை கேட்ட பின், விபரீத யோசனை தோன்றியது. சிங்கத்தின் வழியில், இருவரையும் பிரிக்க திட்டம் போட்டான்.ஒரு நாள் -விட்டலை சந்தித்து, 'உன் நண்பன் கேசவ் பற்றி நீ சரியாக புரிந்து கொள்ளவில்லை; அவன், உன்னை பற்றி என்ன சொன்னான் தெரியுமா...' என்றான் வேலன்.'என்ன சொன்னான்...' 'விட்டல் ஒரு மக்கு; சுயபுத்தி இல்லாதவன். அவனால், எந்த பயனும் இல்லை; நான், நல்ல புத்திசாலி. என்னிடமிருந்து தான் எல்லாம் தெரிந்து கொள்வதாக கூறினான்...' என்றான் வேலன்.'இதை நம்ப மாட்டேன்; அப்படி சொல்லி இருக்க மாட்டான்...' என்றான் விட்டல்.'நீ சரியான ஏமாளி...' 'அப்படியா... இதை அவனிடமே கேட்டு விடுகிறேன்...' என்றான் விட்டல்.'வேண்டாம்... நீ கேட்டால் அவன் ஒப்பு கொள்ள மாட்டான்; உனக்கு, அவனைப் பற்றி தெரியவில்லை; உன், நல்லதுக்கு தான் சொன்னேன்...' என்று சமாளித்தான் வேலன்.கேசவையும் தனியாக சந்தித்து, விட்டல் பற்றி தவறாக கூறினான் வேலன். 'எப்படியும் சண்டை போட்டு இருவரும் பிரிந்து விடுவர்' என்று எண்ணியிருந்தான் வேலன்.எண்ணியபடி இருவரும் சண்டை போட்டு கொள்ளவில்லை; எப்போதும் போல் நட்புடன் பழகினர்; மிகுந்த ஏமாற்றம் அடைந்தான் வேலன். குழந்தைகளே... நட்பில் விரிசல் விழாமல் இருக்க, புரிதல் தான் முக்கியம்.