உள்ளூர் செய்திகள்

அடியும், படியும்!

சிவகங்கை மாவட்டம், கூத்தாண்டாள் கிராம ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 1964ல், 4ம் வகுப்பு படித்த போது வகுப்பு ஆசிரியையாக இருந்தார் கமலம். ஒவ்வொரு நாளும், இரவில் வீட்டுப் பாடம் படித்து, நோட்டில் பெற்றோர் கையெழுத்து வாங்கி வர வேண்டும். அதை, மறுநாள் சரி பார்ப்பார்.ஒருநாள், இரவில் பாடம் படித்து முடித்தேன். அன்று என் அப்பா ஊரில் இல்லை. சித்தப்பாவிடம் கேட்டேன். அவர் ஆங்கிலத்தில் ஏதோ எழுதி, கையொப்பமிட்டு தந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் சமர்ப்பித்தேன். என் நோட்டை சரி பார்த்தவுடன், ஆசிரியை முகம் மாறியது. கையை நீட்டச் சொல்லி பிரம்பால் விளாசினார். வலியால் துடித்து அழுதபடியே, 'இரவில் நன்றாக தான் படித்தேன்...' என்று கூறினேன். அதை மறுத்து, 'படிக்கவில்லை என்றல்லவா இங்கு எழுதி உள்ளது...' என கூறினார். எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் விளையாட்டாக செய்திருந்த விஷயம் என்பதை புரிந்து கொண்டேன். அதுவே, மனதில் வைராக்கியத்தை ஏற்படுத்தி, படித்து முன்னேற துாண்டுதலாக அமைந்தது. கவனத்துடன் படித்து, சிவகங்கை மன்னர் பள்ளியில் வேலை பெற்றேன். எனக்கு, 67 வயதாகிறது. வாழ்க்கையில், குறிக்கோள் அமைத்து முன்னேற உதவியது அந்த கடிதத்தில் இருந்த வரிகள். அதை இன்றும் நினைவில் கொண்டுள்ளேன்.- எம்.ராமசாமி, சிவகங்கை.தொடர்புக்கு: 97904 09906


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !